கூட்டமைப்பினர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவை வழங்குங்கள், நாம் தமிழ் மக்களை கைவிட மாட்டோம் என்கிறார் இந்திக அனுருத்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

கூட்டமைப்பினர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவை வழங்குங்கள், நாம் தமிழ் மக்களை கைவிட மாட்டோம் என்கிறார் இந்திக அனுருத்த

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீதும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நம்பிக்கையை நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம். இதே நம்பிக்கையில் அரசாங்கதின் வரவு செலவு திட்டத்திற்கும் கூட்டமைப்பினர் முழுமையான ஆதரவை வழங்குங்கள். நாம் நிச்சயமாக தமிழ் மக்களை கைவிட மாட்டோம் என வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் வடக்கின் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்தும் குறைபாடுகள் குறித்தும் தெரிவித்தனர். அம்மக்களின் நிலைமைகளை எடுத்துக் கூறினார். அதேபோல் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களையும் ஆதரித்துள்ளனர். 

மக்களின் குறைகளை நாம் கண்டிப்பாக நிவர்த்தி செய்வோம். அதேபோல் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை கொண்டுள்ளமைக்காக நாம் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த நம்பிக்கையை நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம். 

அதேபோல் இதே நம்பிக்கையில் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கதத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குங்கள். நாம் நிச்சயமாக தமிழ் மக்களை கைவிட மாட்டோம்.

அதேபோல் நாட்டில் சகல பகுதிகளிலும் வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, 2015 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு அத்துடன் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் போல் அல்லாது நாம் துரிதமாக வீட்டுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 

முன்னைய ஆட்சியாளர்கள் மக்களின் வயிற்றில் அடித்த காரணத்தினாலேயே மக்கள் நல்லாட்சியை நிராகரித்தனர். ஆனால் நாம் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம். நாம் அர்ஜுன மகேந்திரனின் நிதியில் அபிவிருத்தி செய்யவில்லை. கருப்பு பணத்தில் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கவில்லை. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவம் நாட்டை சரியாக வழிநடத்தி வருகின்றது.

கடந்த காலத்தில் வீடமைப்பு அமைச்சின் கீழ் இடம்பெற்ற ஊழல், அமைச்சரின் மனைவிக்கு அழகுக்கலை நிலையம் ஆரம்பிக்கப்பட்டமை, மக்களின் வரியில் நடந்தேறிய ஊழல்கள், அரசியல்வாதிகள் தமக்கான பெயரில் நிலங்களை அபகரித்தமை என அனைத்தையும் நாம் வெளிப்படுத்துவோம். எம்மிடம் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் இல்லை, ஆனால் மக்களின் பணத்திற்கு பொறுப்புக் கூறியாக வேண்டும்.

நாம் சகல மக்களுக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்போம், வடக்கில் தொடங்கி தெற்க்கு வரை சகல மக்களையும் கவனத்தில் கொள்வோம். ஆனால் சட்டவிரோத இடங்களில் எவரையும் குடியமர்த்த மாட்டோம். நாம் பொறுப்புள்ள ஆட்சியை நம்புகிறோம். ஜனாதிபதியும், பிரதமரும் வீடமைப்பு அமைச்சை அதிக கவனமாக கண்காணித்து வருகின்றனர். எனவே நாம் வெற்றிகரமாக எமது பொறுப்புகளை முடிப்போம் என்றார்.

No comments:

Post a Comment