நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக சிங்ஹல ராவய தேசிய அமைப்பு பொலிஸில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 22, 2020

நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக சிங்ஹல ராவய தேசிய அமைப்பு பொலிஸில் முறைப்பாடு

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நீதி அமைச்சர் அலி சப்ரி அடிப்படைவாதத்தை தூண்டும் வகையில் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படலாம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்து சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் நேற்று (21) பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். அந்த முறைப்பாட்டிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனாவை கட்டுப்படுத்தவும் வைரஸ் பரவாமல் தடுக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் பொதுவான சட்டத்தை கடைப்பிடிப்பது நாட்டு மக்களது கடமை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களாகும்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒன்றான கொராேனாவில் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்த 5 மனுக்கள் நீதிமன்றம் விசாரணை இன்றி தள்ளுபடி செய்திருக்கின்றது. சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த சிறுபான்மைக்கு சட்டத்தின் ஆட்சிக்கு சவால்விட முடியாது என தெரிவித்தே மனுக்களை தள்ளுபடி செய்திருக்கின்றன.

அதனால் நாட்டில் இருக்கும் அனைத்து பிரஜைகளும் நாட்டு சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். என்றாலும் நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் அலி சப்ரி, இந்த செயற்பாட்டுக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்திருக்கின்றார். 

முஸ்லிம் ஒருவர் கொவிட்டில் மரணித்தால் அந்த சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றார். அமைச்சரின் இந்த கருத்து நாட்டின் சட்டத்துக்கு சவால் விடுவதாகும். 

அதேபோன்று கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படலாம் என அவர் தெரிவித்திருப்பதாக தேசிய பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது அவரால் தெரிவிக்கப்பட்டிருந்தால், அது பாரிய கூற்றாகும். இது மறைமுகமாக அடிப்படைவாதத்தை தூண்டும் விடயமாகும்.

அதனால் அமைச்சர் அலி சப்ரியினால் இவ்வாறான கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தால் நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு போன்று அவருக்கு எதிராகவும் சட்டத்தை நிலைநாட்டவேண்டும். எனவே இதுதொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு இதன் உண்மை தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment