(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
2021 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு வேளையில் புதிதாக மூன்று அமைச்சுக்களை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். இந்த அமைச்சுக்களுக்கான நிதி எங்கிருந்து ஒதுக்கப்படுகின்றது என சபையில் கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, புதிய மூன்று அமைச்சுகளையும் கருத்தில் கொண்டு, தற்போது இடம்பெறும் குழுநிலை விவாதம் முடிவடைய முன்னர் திருத்தப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்தை சபையில் நிதி அமைச்சர் முன்வைக்க வேண்டும் என்றார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது.
அமைச்சுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு விவாதங்கள் இடம்பெறும் இந்நிலையில் புதிதாக மூன்று அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பு அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு மற்றும் நேற்று இரவு இராஜாங்க அமைச்சொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போது விவாதிக்கப்பட்டுள்ள விவாதத்தில் இந்த அமைச்சுகளின் கீழ் கொண்டுவரும் ஒரு சில நிறுவனங்கள் குறித்து விவாதித்துக் கொண்டுள்ளோம். ஆனால் அமைச்சுகளுக்கு இன்னமும் நிதி ஒதுக்கப்படவில்லை. குறித்த அமைச்சருக்கு, அதிகாரிகளுக்கு, அமைச்சின் செயலணிக்கு, அமைச்சின் கட்டிடக்கூலிக்கான நிதி எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை.
எனவே இப்போது நடந்துகொண்டுள்ள விவாதமானது குறித்த மூன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுகீடுகள் என்னவென்பது தெரியாது விவாதிக்கப்படுகின்றன. எனவே குறித்த புதிய மூன்று அமைச்சுகளையும் கருத்தில் கொண்டு, தற்போது இடம்பெற்றுக் கொண்டுள்ள குழு நிலை விவாதம் முடிவடைய முன்னர் திருத்தப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்தை சபையில் நிதி அமைச்சர் முன்வைக்க வேண்டும்.
அவ்வாறு திருத்தப்பட்ட வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் குறித்த மூன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருக்க முடியாது, அந்தந்த அமைச்சுக்களின் சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கவோ, வாகனங்களுக்கு எண்ணெய் வழங்கவோ அல்லது வேறு எந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியாது. எனவே திருத்தப்பட்ட வரவு செலவு திட்டமொன்று இந்த சபையில் முன்வைக்கப்படுமா என தெரிந்துகொள்ள விடும்புகின்றேன் என சபையில் கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதில் தெரிவித்த அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன ஜனாதிபதியின் சார்பில் பிரதமர் இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அதேபோல் இப்போது புதிய அமைச்சுக்கள் இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள் புதிய அமைச்சிற்கு மாற்றப்படுகின்றது. புதிதாக அமைச்சுக்களை உருவாக்கவில்லை. அவ்வாறு புதிய விடயங்கள் உருவாக்கப்படும் என்றால் இறுதி நாளுக்கு முன்னர் திருத்தப்பட்ட ஒதுக்கீடு குறித்து சபையில் அறிவிக்கப்படும் என்றார்.
மீண்டும் கேள்வி எழுப்பிட அனுரகுமார எம்.பி நீங்கள் கூறும் விடயத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நிறுவனங்கள் மாற்றப்படுவது என்றால் அதனை அங்கீகரிக்க முடியும். ஆனால் புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. எனவே அதனை உடனடியாக சபைக்கு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் புதிய அமைச்சுக்கள் மீதும் விவாதம் நடத்தி இறுதியாக நிறைவேற்ற முடியும் என்றார்.
No comments:
Post a Comment