(எம்.நியூட்டன்)
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மற்றும் இந்திய அரசிடம் வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்திலும் யாழ். மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரிடமும் மேற்படி இணையத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வட பகுதி மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி உள்ளனர்.
குறிப்பாக கடல் வளம் அளிக்கப்படுவதுடன் கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டும் வருகின்றது.
இவ்வாறான நிலைமையில் கடல் வளத்தையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய இலங்கை அரசிடம் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்திருந்தோம்.
அதுமட்டுமில்லாமல், மீனவர் விவகாரம் தொடர்பில் இலங்கை இந்திய மீனவர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தோம். ஆயினும் இந்த பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இதனால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அந்த மீனவர்களின் போராட்டத்திற்கு நாமும் ஆதரவை வழங்குவதுடன் அவர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரி நிற்கின்றோம்.
இதன் அடிப்படையில்தான் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் கட்டுப்படுத்துமாறு இந்திய இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஊடாக இந்திய அரசாங்கத்திற்கும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஊடாக இலங்கை அரசிற்கும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளோம்.
எனவே, நாட்டின் கடல் வளத்தையும் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து உரிய நடவடிக்கைகளை இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் விரைந்து முன்னெடுக்க வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment