(நா.தனுஜா)
ஆட்சிபீடமேறி மிகக்குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களின் பெரும் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளினால் நாட்டின் சட்டம், ஜனநாயகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக ஆராயும் நோக்கில் பதுளை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது ஆட்சிபீடமேறி மிகக்குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே நாட்டு மக்களின் பெரும் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட ஒரே அரசாங்கம் இதுவாகும். எனினும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் ஆகியவற்றின் ஊடாக மிகவும் வலுவாகத் திகழும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு மிகவும் ஸ்திரமான எதிரணியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்று அரசியல் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன். எந்தவொரு மட்டத்திற்கும் சென்று, கட்சியை மீண்டும் மறுசீரமைப்பதற்கு ஏற்ற வகையில் ஆதரவாளர்களைத் திரட்டிக் கொள்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
எதிர்வரும் காலத்தில் மாவட்ட ரீதியான மாத்திரமன்றி, ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளுக்கும் சென்று கட்சி ஆதரவாளர்களை வலுப்படுத்தி, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளத்தக்க வகையில் கட்சியை மேம்படுத்துவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றேன்.
மஹர சிறைச்சாலையில் 11 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையாக மாறுவதைத் தடுப்பதற்காக, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான பானம் தொடர்பில் ஒரு சர்ச்சையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளினால் நாட்டின் சட்டம், ஜனநாயகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளன.
அரசாங்கத்துடன் தொடர்புபட்டவர்களில் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்தவர்கள் சில தினங்களிலேயே விடுவிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இது நீதிமன்றக் கட்டமைப்பின் நம்பகத்தன்மை மீது பாரிய சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment