அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பார் (William Barr) நத்தாருக்கு முன்னர் தமது பதவியை இராஜினாமா செய்வாரென ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவருடைய பதவி ஜனவரி 20 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். அதில் ஜோ பைடன் 306 வாக்குகளும், நடப்பு ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றனர்.
பல்வேறு மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் இன்று முழுமையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிலும் ஜோ பைடனே வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவரும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி வருகிறார். இதனால், அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
டிரம்ப் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் போதும் அமெரிக்க ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனுக்கு மாற்றம் செய்யும் நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆட்சி மாற்ற பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பார் (William Barr) நத்தாருக்கு முன்னர் தனது பதவியில் இருந்து விலகுவார் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்பின் விசுவாசியாக கருத்தப்பட்ட சட்டமா அதிபர் வில்லியம் பார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என கூறினார். இதனையடுத்து இருவருக்குமிடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
தற்போது வில்லியம் தனது பதவியை ராஜினாமா செய்வார் என டிரம்ப் அறிவித்துள்ள நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. சட்டமா அதிபர் பதவியில் இருந்து விலகுவது ஜோ பைடனின் வெற்றியையும், ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி முடிவுக்கு வருவதையும் கிட்டத்தட்ட உறுதிபடுத்தும் நிகழ்வாகவே கருதப்படுகிறது.
தேர்தல் பிரசார காலப்பகுதியில், ஜோ பைடனின் மகன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை பகிரங்கப்படுத்தாமை தொடர்பில் அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பாரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.
No comments:
Post a Comment