தீவிரவாதத்திற்கு அனுசரணை அளிக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து 27 ஆண்டுகளின் பின் சூடானை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளது.
சூடான் தலைநகர் கார்டூமில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
“கொங்கிரஸின் 45 நாள் அறிவிப்புக் காலம் நிறைவடைந்திருப்பதோடு சூடானை தீவிரவாதத்திற்கு அனுசரணை அளிக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கும் இராஜாங்கச் செயலாளரின் கையொப்பம் இடப்பட்ட அறிவிப்பு டிசம்பர் 14 ஆம் திகதி அமுலுக்கு வருகிறது. அது அமெரிக்க மத்திய பதிவில் வெளியிடப்படுகிறது’ என்று அமெரிக்க தூதரகம் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறுவது சூடானின் நிலைமாற்ற அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருந்தது. சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த நிலைமாற்று அரசு பதவி ஏற்றது.
அல் பஷீர் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி 1993 ஆம் ஆண்டிலேயே சூடானை அமெரிக்கா தீவிரவாதத்திற்கு அனுசரணை அளிக்கும் நாடுகள் பட்டியலில் சேர்த்தது.
இதனால் அத்தியாவசியமாக இருந்த சர்வதேச நிறுவனங்களில் இருந்து கடன் நிவாரணங்களை பெறுவதற்கு சூடான் தகுதியை இழந்தது.
இந்நிலையில் கென்யா மற்றும் தன்சானியாவில் 1998 ஆம் ஆண்டு அமெரிக்கத் தூதரகங்கள் ஆயுதக் குழுக்களால் தாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு இழப்பீடாக சூடான் 335 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்ததை அடுத்து இந்தப் பட்டியலில் இருந்து சூடான் நீக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஒக்டோபரில் அறிவித்தார்.
டிரம்ப் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இது பற்றிய அறிவிப்பை அமெரிக்க கொங்கிரஸுக்கு அனுப்பினார். அமெரிக்க சட்டத்தின்படி கொங்கிரஸ் இதற்கு ஆட்சேபணையை தெரிவிக்காத பட்சத்தில் இந்த அறிவிப்பு 45 நாட்களில் அமுலுக்கு வரும்.
அமெரிக்காவுடனான உறவை சுமுகமாக்கும் மற்றொரு முயற்சியாக சூடான் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவையும் ஏற்படுத்தியது. ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் அண்மையில் மொரோக்கோ ஆகிய நாடுகள் உட்பட கடந்த மூன்று மாதங்களுக்குள் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திய நான்கு நாடுகளில் ஒன்றாகவும் சூடான் பதிவானது.
இந்நிலையில் தீவிரவாதத்திற்கு அரச அனுசரணை வழங்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பட்டியலில் ஈரான், வட கொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளே தொடர்ந்து நீடித்து வருகின்றன.
No comments:
Post a Comment