என்ஜின் ஒயிலை குடிக்க முற்பட்டால் இறுதியில் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க முடியாமல் போகும் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை என்ன : ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

என்ஜின் ஒயிலை குடிக்க முற்பட்டால் இறுதியில் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க முடியாமல் போகும் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை என்ன : ரணில் விக்கிரமசிங்க

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொரோனாவுக்கான மருந்து என உறுதிப்படுத்தப்படாத மருந்து வகைகளை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்துக்கு அறிவிப்பது பிழையான விடயமாகும். இலங்கை மருந்து கட்டுப்பாடு அதிகார சபையினால் உறுதிப்படுத்திய மருந்து வகைகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் என்ஜின் ஒயிலை குடிக்க முற்பட்டால் இறுதியில் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க முடியாமல் போகும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பியகம பிரதேசத்தில் லயன்ஸ் கழகத்தினால் அமைக்கப்படவிருக்கும் தொழில் பயிற்சி மத்திய நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் மருந்து என உறுதிப்படுத்தப்படாத மருந்து தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் அதனை அறிவிப்பது பிழையான விடயமாகும். 

குறைந்தபட்சம் இலங்கை மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகார சபையினால் அங்கிகரிக்கப்பட்ட மருந்து வகைகளையே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் 'என்ஜின் ஒயிலை' குடிக்க முற்பட்டால் மூலம் இறுதியில் எவ்வாறான விடயங்கள் இடம்பெறக் கூடும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. மிகவும் கொடூரமான உலக தொற்றான இதற்கு முகங்கொடுக்கும்போது பொறுப்புடன் செயற்பட வேண்டும். 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் மத்திய நிலையம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனாவுக்கான மருந்தொன்றை உற்பத்தி செய்வதற்கு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் நிலையில், இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கின்றேன்?

இலங்கை அரசாங்கம் இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் பிரித்தானிய அரசாங்கம் அதற்கு ஆதரவளித்திருக்கின்றது. அங்கு இடம்பெறும் ஆய்வு தொடர்பில் தேடிப்பார்க்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு இரண்டு, மூன்று தடவைகள் சென்றிருக்கின்றார். 

மீண்டுமொரு கொரோனா அலை நாட்டுக்கு வரலாம். அதனால் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டி இருக்கின்றது. அதற்காக அரசாங்கம் இது தொடர்பான உண்மைகளை மக்களிடம் மறைக்கக் கூடாது.

அத்துடன் கொரோனா தொற்று நிலைமை இன்னும் சில வருடங்களுக்கு இருக்கும். அதனால் உறுதிப்படுத்தப்பட்ட மருந்துகள் தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்த வேண்டும். இலங்கை மருந்து கட்டுப்பாடு அதிகார சபையினால் அனுமதிக்கப்பட்ட மருந்துகளை மாத்திரம் பயன்படுத்த வேண்டும்.

இந்த மருந்துகளை ஆய்வு செய்யும் இடங்களுக்கு அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்தவர்கள் அங்கு சென்று பார்க்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த எவரும் இதுவரை பார்க்கச் செல்லவில்லை என்றார்.

No comments:

Post a Comment