பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு புதிய தலைவர் நியமனம்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றியத்தின் பிரதித் தலைவர்களாக திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போதே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரள, ஹரிணி அமரசூரிய, டயனா கமகே, கோகிலா குணவர்தன, மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றத்திலும் பொதுவாகவும் இலங்கையில் அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதற்காக, அரசியல் ரீதியாகவும் மனப்பாங்கு ரீதியாகவும் சமூகத்தை விழிப்பூட்டும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது பெண்கள் தொடர்பில் முன்வைக்க வேண்டிய யோசனைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் கலந்துரையாட இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment