கார்த்திகை விளக்குகளை எட்டி உதைத்து உடைத்தெறிந்த இராணுவம், பொலிசாருக்கு எதிராக விசாரணை வேண்டும் : ஸ்ரீதரன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

கார்த்திகை விளக்குகளை எட்டி உதைத்து உடைத்தெறிந்த இராணுவம், பொலிசாருக்கு எதிராக விசாரணை வேண்டும் : ஸ்ரீதரன் எம்.பி.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கார்த்திகை மாதம் என்றால் இராணுவமும் பொலிஸாரும் ஏன் அச்சமடைகின்றனர்? நாம் தமிழ் சைவர்கள். எமக்கு எமது இந்து விழாக்களை, புனித நாட்களை கொண்டாட அனுமதியில்லையா? ஏன் இந்து மக்களை களங்கப்படுத்துகின்றீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

கார்த்திகை விளக்கீட்டு தினத்தில் விளக்குகளையெல்லாம் காலால் எட்டி உதைத்து உடைத்தெறிந்த இராணுவத்தினதும் பொலிஸாரினதும் அராஜக செயற்பாடுகள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே இந்தக் கோரிக்கையை விடுத்தார். 

ஸ்ரீதரன் எம்.பி மேலும் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை இந்துக்களின் புனித தினமான கார்த்திகை விளக்கீடு. அன்று கிளிநொச்சி பரந்தன் 161 ஆம் கட்டைப் பகுதியில் கந்தையா வேலுப்பிள்ளை என்ற 68 வயது பாரிசவாத நோயாளியானவரும், பராசக்தி என்ற 60 வயது மூதாட்டியும் கார்த்திகை தீப திருநாளுக்காக தமது வீட்டில் விளக்குகளை ஏற்றியிருந்த நிலையில் அங்கு பரந்தன் இரசாயன தொழிற்சாலை இராணுவ முகாமிலிருந்து சென்ற 15 இராணுவத்தினர் அந்த கார்த்திகைத் தீபங்களை சப்பாத்துக் கால்களால் உதைத்தும் உடைத்துள்ளதுடன், பாரிசவாத நோயாளியான அந்த முதியவரையும் தாக்கியுள்ளனர்.

இதுபோன்று பல்கலைக்கழகத்தில் கார்த்திகை தீபம் ஏற்றிய மசகையா தர்ஷிகன் என்ற மாணவனை பொலிஸார் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். 

அதேபோன்று சுன்னாக்கள் பொலிஸார் அங்குள்ள ஆலயம் ஒன்றில் கார்த்திகை தீபத்திருநாளுக்காக எரிப்பதற்கு தயார் செய்யப்பட்டிருந்த சொக்கப்பனை என்று சொல்லப்படுகின்ற பெரிய தீபத்துக்கான ஏற்பாடுகளை தடுத்ததுடன் அந்த சொக்கப்பனையையும் புடுங்கி எரிந்துள்ளதுடன் அதனை சுற்றி நடப்பட்டிருந்த வாழை மரங்களையும் புடுங்கி வீசியுள்ளனர்.

சபாநாயகர் அவர்களே, தயவுசெய்து இராணுவம் பொலிஸாருக்கு இந்து மக்களின் புனித தினங்கள் தொடர்பாக தெளிவூட்ட நடவடிக்கை எடுங்கள். 

இந்துக்களின் புனித நாளான கார்த்திகை விளக்கீட்டு தினத்தில் விளக்குகளையெல்லாம் காலால் எட்டி உதைத்து உடைந்திருந்ததுடன் ஆலயங்களில் கூட சொக்கப்பனைகளை புடுங்கியெறிந்த இராணுவத்தினதும் பொலிஸாரினதும் அராஜக செயற்பாடுகள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment