(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தினால் கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழப்பமடைந்துள்ளனர். அதனால் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத்தவறினால் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் பரவும் அபாயம் இருக்கின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்றம் நேற்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதன் பின்னர், கம்பஹா மாவட்ட உறுப்பினர் ஹர்ஷண ராஜ கருணா எழுந்து, மஹர சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்திருக்கின்றவர்கள் யார்?, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் யார் என்று தெரியாமல் சிறைக் கைதிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் குழப்பமடைந்திருக்கின்றனர்.
பொலிஸாரின் கால்களில் விழுந்து, தங்களின் பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என தெரிவிக்குமாறு அழுது கதருகின்றனர். அதனால் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், காயடைந்துள்ளவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த கம்பஹா மாவட்ட உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன, மஹர சிறைச்சாலையில் போன்று தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மஹர சிறைச்சாலையைவிட நீர்கொழும்பு சிறைச்சாலை விசாலமானது. அங்கு கைதிகளும் அதிகம் இருக்கின்றனர். அதனால் அவர்களின் கோரிக்கையாக இருக்கும், பி.சி.ஆர். பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் அச்சத்தில் இருக்கின்றனர். இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தவறினால் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் இது பரவும் அபாயம் இருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment