டென்மார்க்கில் புதைகுழிகளில் இருந்து மில்லியன் கணக்கான கீரி வகை நீர் நாய்களின் சடலங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளன.
நீர் நாய்களில் கொவிட்-19 நோயை உருவாக்கும் வைரஸ், மரபணு ரீதியாக உருமாறி மனிதர்களுக்குப் பரவலாம் என்னும் அச்சம் காரணமாக, டென்மார்க்கில் கடந்த மாதம் சுமார் 17 மில்லியன் நீர் நாய்களைக் கொல்ல உத்தரவிடப்பட்டது.
அவ்வாறு புதைக்கப்பட்ட நீர் நாய்க் கூட்டங்களில் சில, அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அரைகுறையாகப் புதைக்கப்பட்ட நீர் நாய்கள், புதைகுழியிலிருந்து மேலே எழுந்து வந்துவிட்டன.
அந்த நீர் நாய்கள் தற்போது குடியிருப்புப் பகுதிகளில் உலாவுகின்றன. அதைக் கண்டு அச்சமடைந்த குடியிருப்பாளர்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.
அதுபோக ஒரு கூட்டுப் புதைகுழி, முக்கியமான நன்னீர் ஏரிக்கு அருகே 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது குறித்தும் குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.
குடிக்கவும், குளிக்கவும் அந்த ஏரி நீர் பயன்படுத்தப்படுகிறது. புதைக்கப்படும் நீர் நாய்களால் அந்த ஏரித் தண்ணீர் மாசுபடலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், அது குறித்து அஞ்ச வேண்டாமென அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர்.
புதைகுழியில் இருந்து நீர் நாய்களின் சடலங்களைத் தோண்டி எடுக்க அந்நாட்டு பாராளுமன்றம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
நீர் நாய்களின் சடலங்கள் அடுத்த ஆண்டு மே மாதம், தோண்டி எடுக்கப்படவுள்ளன. அருகில் உள்ள எரியாலையில் அந்த நீர் நாய்களின் சடலங்கள் எரிக்கப்படும்.
கைப் பைகளிலும் ஆடம்பரப் பொருட்களிலும் பயன்படுத்தப்படும், மென்மையான உயர் வகை உரோமத்துக்காக, டென்மார்க்கில் மில்லியன் கணக்கான கீரி வகை நீர் நாய்கள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.
No comments:
Post a Comment