நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, முதியவர்களும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அநாவசியமாக சமூகத்திற்குள் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதான விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதற்கு உதவும் வகையிலேயே சுகாதார அமைச்சினால் வீடுகளுக்கே நேரடியாக மருந்து வழங்கப்படும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், முன்னரை விட தற்போது ஒப்பீட்டளவில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதை அவதானிக்க முடிகிறது. அதேபோன்று அண்மையில் தொற்றாளர்களின் உடலில் காணப்படும் வைரஸின் அளவும் குறைவடைந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் அளவு குறைவடையும் என்பது தெளிவாகிறது.
கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளில் தொற்றாளர்களை இனங்காணல், அவர்களை அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தல், தொடர்பாளர்களை தனிமைப்படுத்தல், அவர்களுக்கிடையில் தொற்றாளர்கள் இருந்தால் அவர்களையும் இனங்காணல் என்பவற்றை தொடர்ச்சியாக முன்னெடுத்தால் அந்த பகுதியிலும் விரைவாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.
தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படுவதில்லை. அவர்கள் இடைநிலை பராமறிப்பு நிலையங்களுக்கே அனுப்பப்படுகின்றனர். தமக்கு எவ்வித அறிகுறியும் இல்லாத போதிலும் ஏன் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர் என்று அவர்கள் எண்ணக்கூடும்.
அறிகுறியற்ற போதிலும் தொற்றுக்கு உள்ளானால் அவர்களிடமிருந்து மற்றையவர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எனவேதான் அறிகுறியற்றவர்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. அத்தோடு சிகிச்சை நிலையங்களில் வேறு நோய்க்கு உள்ளாகக் கூடும் என்று பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment