சிறைச்சாலைகளில் தொற்று பரவுவலை கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன - விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

சிறைச்சாலைகளில் தொற்று பரவுவலை கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன - விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்

(எம்.மனோசித்ரா)

சிறைச்சாலைக்கு கைதிகளின் உறவினர்கள் சென்று அவர்களை பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பிணையில் சிலர் வெளியில் செல்லல் உள்ளிட்ட காரணிகளால் தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எவ்வாறிருப்பினும் இவ்வாறு தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இரண்டாம் அலையில் ஏற்பட்ட கொத்தணி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருகிறது. இவ்வாறான நிலையில் இந்த கொத்தணி வீழ்ச்சியடையும் அதேவேளை, பிரிதொரு பகுதியில் வேறு கொத்தணி உருவாகாமல் தடுப்பதே தற்போது எமக்குள்ள சவாலாகும்.

நாம் ஒவ்வொருவரும் எமக்கான பயணங்களை வரையறுத்துக் கொண்டால் மாத்திரமே இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். தற்போது உற்சவ காலம் ஆரம்பமாகவுள்ளதால் இயன்றவரை மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்த்து, அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அவரவர் வீடுகளிலேயே கொண்டாடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

சிறைச்சாலை என்பது மிகவும் முக்கியமானதொரு இடமாகும். அங்கு காணப்படும் சுற்றாடல், வெளியில் உள்ளதை விட முற்றிலும் வேறுபட்டது என்பதை நாம் அறிவோம். எனவே இவ்வாறான இடங்களில் தொற்று ஏற்பட்டால் அது வேகமாகக் பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

எனினும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வந்து அவர்களைப் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பிணை மூலம் வெளியில் செல்லல், வேறு காரணிகளால் சிறைக்கு ஏனையோர் செல்லல் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொற்றாளர் உற்செல்லக் கூடிய வாய்ப்பும் உள்ளது. 

எனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களை தவிர்த்துக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே சுகாதார தரப்பினர், சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து சிறைச்சாலைகளில் கொத்தணி ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment