(க.பிரசன்னா)
நாட்டிலுள்ள சுற்றுலா சேவைகள் வழங்குநர்கள் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்வது கட்டாயமானதெனவும் உரிய வகையில் பதிவு செய்யாமையினால் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணங்களை சிலருக்கு பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலா தொழில் துறையுடன் தொடர்புப்பட்ட சாரதிகள், சுற்றுலா வழிகாட்டுநர் உள்ளிட்ட சுற்றுலா தொழில் துறை சேவை வழங்குனர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளுக்காக நாட்டில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் சுற்றுலா சேவைகளை வழங்குவோரை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்வது அத்தியாவசியம். அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சட்டத்தின் 48(3) சரத்துக்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சுற்றுலா சேவைகளை வழங்குவோரை சுற்றுலா சேவை அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்காக இதுவரையில் பல நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொண்டுள்ளன.
சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும். இதற்கமைய சுற்றுலா சேவைகளை வழங்குவோரை பதிவு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக இணைய முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உரிய வகையில் பதிவு செய்யப்படாததினால் கொவிட் - 19 தொற்று நிலைமையின் காரணமாக அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்கு சிலரினால் முடியாமல் போயுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுற்றுலா சாரதிகளுக்கு சுற்றுலா சேவை அதிகார சபையினால் முறையிலான பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த பயிற்சியை நாடு முழுவதிலும் உள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களின் ஊடாக வழங்குவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதில் முன்கூட்டியே பயிற்சிகளை பெற்றவர்களுக்கு பயிற்சி மதிப்பு மீளாய்வு வேலைத்திட்டம் ஒன்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment