முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் ஒரு மாத காலத்தில் 934 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் ஒரு மாத காலத்தில் 934 பேர் கைது

(செ.தேன்மொழி)

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கடந்த ஒரு மாத காலத்தில் 934 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் பத்து பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளும், அட்டுலுகம மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிகளில் சில கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த பகுதிகளில் வசிக்கும் அனைவரையும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதேவேளை, முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நேற்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்தில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 934 கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசித்து வருபவர்கள் உரிய சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அதற்கமைய பயணக்கட்டுபாட்டுக்கமைய செயற்படுதல், சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய செயற்படுதல் என்பன கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இதன்போது சுகாதார பிரிவினர் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினால் உடனே அதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment