(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், தடுப்பூசி பெற்றுக் கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
அத்துடன் உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக் கொண்டு அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்று அதிகரித்துச் செல்கின்றது. எமது நாட்டிலும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இவ்வாறான நிலையில் தனவந்த நாடுகள் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள தேவையான கேள்வி கோரல்களை மேற்கொண்டிருக்கின்றன. எமது நாடு இது தொடர்பாக இதுவரை எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கின்றேன்.
மேலும் அடுத்த வருடம் நடுப்பகுதிவரை கொவிட் பிரச்சினை இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள சர்வதேச நாடுகளுடன் அரசாங்கம் எவ்வாறான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்கின்றது. நாடு என்ற வகையில் முன்னுக்கு செல்ல அரசாங்கம் எடுத்துவரும் வேலைத்திட்டங்கள் என்ன?. இவை எதுவுமே மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றன. இது தொடர்பாக அரசாங்கம் முறையான அறிவிப்பொன்றை நாட்டுக்கு விடுக்க வேண்டும்.
மேலும் அரசாங்கம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும்போது தரத்தில் உயர்ந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தற்போது தடுப்பூசிக்கு உலகளாவிய ரீதியில் பாரியளவில் கேள்வி கோரல்கள் இருப்பதால் தட்டுப்பாடுகள் ஏற்படலாம். அதனால் சர்வதேச நாடுகளில் இருக்கும் எமக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு அதனை பெற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொள்ளப்பட்டால் அதனை எவ்வாறு விநியோகிப்பது? அதற்காக அரசாங்கம் எடுத்திருக்கும் வேலைத்திட்டம் என்ன? இது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் பெற்றுக் கொள்ளப்படும் தடுப்பூசியை நாட்டில் அனைத்து மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment