(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவ கொள்கையின் காரணமாகவே தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
இலங்கை மன்ற கல்லூரியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 2005 தொடக்கம் 2014 வரையிலான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொண்டது. 30 வருட கால யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த காலப்பகுதியில் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி முன்னேற்றமடைந்த நிலையில் காணப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி முறையற்ற பொருளாதார முகாமைத்துவ கொள்கையினை செயற்படுத்தியது. தேசிய உற்பத்திகள் திட்டமிட்ட வகையில் அழிவுக்கு கொண்டு வரும் நிலையில் காணப்பட்டது.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது. எதிர்காலத்தில் பொருளாதார மட்டத்தில் ஏற்படவுள்ள சவால்களை வெற்றிக் கொள்ளும் வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment