பொத்துவில் பிரதேசத்திற்கு தனியான கல்வி வலயமொன்று உருவாக்கப்பட வேண்டும். இந்தக் கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான தேவை நீண்ட காலமாக இருந்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது, பொத்துவில் பிரதேசத்தில் கல்வி வலயத்தை உருவாக்கும் விவகாரம் தொடர்பில் நாம் நீண்ட காலமாக கதைத்து வருகின்றோம். பொத்துவில், அம்பாறை பிரதேச கல்வி வலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் நீண்ட காலமாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக பொத்துவில் பிரதேசத்திற்கு தனியான கல்வி வலயமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற விடயத்தில் பல கட்டங்களை தாண்டி வந்துள்ளோம். கிழக்கு மாகாண ஆளுனரின் அனுமதியுடன் கல்வி அமைச்சுக்கு இது தொடர்பிலான விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படாதுள்ளது.
குறைந்தபட்சம் 50 பாடசாலைகள் ஒரு கல்வி வலயத்தில் இருக்க வேண்டுமென்ற விடயத்திற்கு புறம்பாக இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். ஏனென்றால் இங்குள்ள மக்களுக்கான வளப்பங்கீடு, ஆளனி தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
லவுகல பிரதேசத்திலுள்ள சிங்கள பாடசாலை மாணவர்களும் பல தேவைகளுக்காக அம்பாறைக்குச் செல்ல வேண்டியுள்ளது. அந்தப் பாடசாலையையும் சேர்த்து பொத்துவில் கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும்.
கண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பல பாடசாலைகளில் ஆளனி குறைப்பாடு காணப்படுகிறது. அதனை தீர்க்கும் அதேவேளை, இந்தப் பாடசாலைகளில் உள்ள வளப்பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
கம்பளை சாஹிரா பாடசாலையில் பாவனைக்கு உதவாத கட்டடங்கள் அகற்றப்பட வேண்டிய தேவையுள்ளது. அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இவை பாதிக்கப்பட்டுள்ளன. அகற்றப்படும் கட்டங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
அக்குரணை சாஹிரா பாடசாலை, அக்குரணை மத்திய பாடசாலை உட்பட பல பாடசாலைகளில் இரண்டு மூன்று தசாப்தங்களாக கட்டடங்கள் வழங்கப்படாதுள்ளது என்றார்.
சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment