தாழமுக்கம் சூறாவளியாக மாறலாம் என எச்சரிக்கை - நாளை இலங்கையின் கிழக்கு கரையை அடையும் சாத்தியம் - கடல் கொந்தளிப்பாக காணப்படும்; 80-100 கி.மீ. வேகத்தில் காற்று - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

தாழமுக்கம் சூறாவளியாக மாறலாம் என எச்சரிக்கை - நாளை இலங்கையின் கிழக்கு கரையை அடையும் சாத்தியம் - கடல் கொந்தளிப்பாக காணப்படும்; 80-100 கி.மீ. வேகத்தில் காற்று

தென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து இன்று (01) அதிகாலை 5.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக சுமார் 530 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தொகுதியானது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அது பெரும்பாலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை (02) மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 200 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், ஒரு சில இடங்களில்100 மி.மீ. இற்கும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, நாடு முழுவதிலுமுள்ள கடல் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், மணிக்கு 80-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment