கிழக்கு மாகாண அனைத்து பாடசாலை‌களும் தற்காலிகமாக மூடப்படுகின்றன - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

கிழக்கு மாகாண அனைத்து பாடசாலை‌களும் தற்காலிகமாக மூடப்படுகின்றன

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மூடுமாறு, கிழக்கு மாகாண ஆளுநர், அநுராதா யஹம்பத் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (01) மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அவர் இவ்வாலோசனையை வழங்கியுள்ளார்.

இதன்படி நாளை புதன்கிழமை (02) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) வரை கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்படும் என, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.

தென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் நிலை, ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து கிழக்கு கடற்கரை வலயத்தை நோக்கி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண மக்களின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலைமையினால், சூறாவளி போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பொருட்டான முகாம்களாக பாடசாலைகளை பயன்படுத்த முடியும் என்பதும் இதற்கு மற்றொரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மழை, வெள்ளம், சூறாவளி போன்ற அனர்த்தங்களிலிருந்து பொதுமக்களை முன்கூட்டியே காக்கும் நோக்கில் இவ்விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, இம்முகாம்களை பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும், இடம்பெயரும் குடும்பங்களுக்கு தலா ஒரு வகுப்பறை எனும் வகையில் மட்டுப்படுத்துமாறும், மாவட்ட செயலாளர்களுக்கு, ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலில் ஈடுபடுவோர், மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டத்தில், மாகாண பிரதான செயலாளர் துசித்த பீ. வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர்.எல்.பீ. மதநாயக்க, மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.பி. முத்துபண்டா உள்ளிட்ட மாகாண, மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள், திட்ட பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment