புரெவி சூறாவளியால் யாழில் தொடரும் மழை - 756 குடும்பங்கள் பாதிப்பு - வீதிகள், ஒழுங்கைகளில் வெள்ளம் - மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக செயலிழப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

புரெவி சூறாவளியால் யாழில் தொடரும் மழை - 756 குடும்பங்கள் பாதிப்பு - வீதிகள், ஒழுங்கைகளில் வெள்ளம் - மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக செயலிழப்பு

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை 756 குடும்பங்களைச் சேர்ந்த 2,941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதாகவும், 4 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 153 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 5 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளிலேயே குறித்த இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புரெவி சூறாவளியினால் ஏற்பட்ட கடும் மழை, பலத்த காற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இருபாலை தெற்கு, இருபாலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தபுரம், ஞானவைவரவர் கோயிலடி, வசந்தபுரம், மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக செயலிழந்துள்ளது.

புதிய செம்மணி வீதி, கட்டப்பிராய் கலைமணி வீதி, சின்னக் கோவில் வீதி மற்றும் பல வீதிகள், ஒழுங்கைகள் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் போக்கு வரத்து செய்ய முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றார்கள். பயன்தரு மரங்கள் பலவும் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீதிப் போக்கு வரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

இன்று காலை முதல் குறித்த பிரதேசங்களின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் மக்களின் நலன்களை பேணும் வகையிலும், இயல்பு நிலைமைகளை ஏற்படுத்துவதற்கும் கிராம சேவையாளர் ஊடாகவும், பிரதேச சபையின் ஊடாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மக்களை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் சிறுவர்கள் எவரையும் வெளியான பிரதேசங்களுக்கு நடமாட அனுமதிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் பாதிப்பு விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், வெள்ளங்களை வெளியேற்றும் வகையில் துரிசுகளை திறப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார். 

குறித்த பகுதி மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு பொது அமைப்புக்கள், தன்னார்வ கொடையாளர்களின் உதவிகளையும் அப்பகுதிமக்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment