சமூகத்தில் ஏற்படக் கூடிய பாரிய பாதிப்புக்களை தடுப்பதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் உச்ச பட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்பட்டது - பாதுகாப்புச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

சமூகத்தில் ஏற்படக் கூடிய பாரிய பாதிப்புக்களை தடுப்பதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் உச்ச பட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்பட்டது - பாதுகாப்புச் செயலாளர்

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட 186 கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்று சமூகத்தில் நுழைந்தால் ஏற்படக் கூடிய பாரிய பாதிப்புக்களை தடுப்பதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் உச்ச பட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்பட்டது என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பு - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். 

பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறுகையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தால் கைதிகள் சிலர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதால் சிறைச்சாலை அதிகாரிகள் உயர்மட்ட அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். 

இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட வேறு இடத்திற்கு மாற்றப்படவிருந்த 186 கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்று சமூகத்தில் நடமாடுவார்களாயின் எந்தளவிற்கு அபாய நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதை அனைவராலும் சிந்திக்க முடியும்.

எனவே சமூகத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பை தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, அந்த சந்தர்ப்பத்தில் உயர்மட்டத்தில் அதிகாரங்களை உபயோகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

செவ்வாய்க்கிழமை மாலை குறித்த கைதிகள் மீண்டும் அமைதியற்ற நிலைமையை தோற்றுவிக்க முயற்சித்தனர். அந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதை மறுநாள் காலை வரை ஒத்தி வைப்பதற்கு நான் தீர்மானித்தேன். காரணம் அந்த சந்தர்ப்பத்தில் இவர் சிறைச்சாலைக்குள் சென்றிருந்தால் உயிர் சேதம் ஏற்படவும் மேலும் பலர் காயமடையவும் வாய்ப்பிருந்தது. 

எனவேதான் வேறு சிறைச்சாலைகளிலிருந்து 200 அதிகாரிகளையும், விசேட அதிரடிப் படையினர் 200 பேரையும் மற்றும் பொலிஸார் 200 பேரையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறைச்சாலை நிலைவரத்தை அதிகாரிகள் மீண்டும் தம்வசப்படுத்திக் கொள்ள அவர்கள் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்.

அதற்கமைய செவ்வாய்க்கிழமை பகல் 1.30 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் சுமார் 10 நிமிடங்களில் நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தார்கள். இதன்போது கைதிகளிடம் காணப்பட்ட மருந்துகள், சமையறையில் உபயோகிக்கப்படும் கத்திகள் என்பவை அவர்களிடமிருந்து அகற்றப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment