(எம்.எப்.எம்.பஸீர்)
மன நல விடயங்களுக்காக வழங்கப்படும் மருந்துகளை உட்கொண்டதால் மஹர சிறைச்சாலையில் கைதிகள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பில் வெளியிடப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என மனநல விஷேட வைத்திய நிபுணர் ஜயான் மெண்டிஸ் தெரிவித்தார்.
இவ்வாறான பொய்யான விடயங்களை ஊடகங்கள் ஊடாக வெளியிடுவதால், குறித்த மருந்துகளை பயன்படுத்தும் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அந்த மருந்துகள் குறித்த நம்பகத்தன்மை தொடர்பிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் விஷேட வைத்திய நிபுணர் ஜயான் மெண்டிஸ் சுட்டிக்காட்டினார். எனவே இது தொடர்பில் ஊடகங்கள் ஊடாக மக்களை தெளிவுபடுத்த தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த மருந்துகள் ஊடாக, ஒருவரின் மன அழுத்ததை குறைத்து குழப்பமற்ற மன நிலையை ஏற்படுத்துவது அல்லது நித்திரைக்கு இட்டுச் செல்வதையே இந்த மருந்துகள் ஊடாக செயற்படுத்தப்படும். எனவே அடிப்படையற்ற கருத்துக்களை வெளிப்படுத்த முன்னர் குறைந்தது வைத்தியர்களின் அறிவுறுத்தல்களையாவது பெற்றிருக்கலாம்.
எவ்வாறாயினும் போதைப் பொருட்கள் ஊடாக இத்தகைய வன்முறை நிலைமைகள் ஏற்படலாம். எந்த விசாரணையும் செய்யாமல் இவ்வாறு மருந்துகள் தொடர்பில் சிறை அதிகாரிகள், பொலிஸ் பேச்சாளர், அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிடுவது கவலைக்குரியதாகும்.' என தெரிவித்தார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்த மருந்து களஞ்சியத்தை உடைத்து கைதிகள் அங்கிருந்த மன நல மருந்துகளை உட்கொண்டதன் பின்னரே, அங்கு வன்முறை நிலைமை தோற்றம் பெற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண அந்த கருத்தினை வலுப்படுத்தும் விதமாக சிறை வைத்தியசாலை மருந்தக களஞ்சியத்தில் இத்தகைய 21 ஆயிரம் மாத்திரைகள் இருந்துள்ளதாகவும், இந்த குழப்பத்தின் பின்னணியில் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சந்தேகம் எழுவதாகவும் கூறியிருந்தார்.
இதனைவிட, பாராளுமன்ரத்தில் முதன் முதலாக இத்தகைய கருத்தினை அமைச்சர் விமல் வீரவன்ச முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment