புதிய பிரேரணை வரின் அதையும் வலுவிழக்கச் செய்தே தீருவோம் - 2021 இன் ஆரம்பத்தில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

புதிய பிரேரணை வரின் அதையும் வலுவிழக்கச் செய்தே தீருவோம் - 2021 இன் ஆரம்பத்தில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து எமது அரசு வெளியேறிவிட்டது. எனவே, இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கொரோனாவை ஒழிப்பதில் நாம் நியமித்த கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினர் முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர். 

முழு நாட்டையும் முடக்காமல் நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்காமல் கொரோனா பரவும் இடங்களை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளைத் தனிமைப்படுத்தித் தொற்றுப் பரவலைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றனர்.

இதற்கு ஒத்துழைத்துவரும் மருத்துவத் துறையினர், சுகாதாரத் துறையினர், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு எமது நன்றிகளும், பாராட்டுக்களும் எப்போதும் இருக்கும். 

பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் உருவெடுத்துள்ளது. அது இலங்கையிலும் பரவக்கூடாது என்பதற்காகவே அந்த நாட்டிலிருந்து இங்கு பயணிகள் வருவதை தற்காலிமாகத் தடை செய்துள்ளோம். 

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து கொரோனாத் தடுப்புக்கான தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, 2021 இன் ஆரம்பத்திலேயே இலங்கையில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இதனிடையே எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வை முன்னிலைப்படுத்தி இங்கு எதிர்க்கட்சியினர் தமது சுயலாப அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து எமது அரசு வெளியேறிவிட்டது.

எனவே, இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம். எதிர்க்கட்சியினரின் ஜெனிவாப் பரப்புரைகள் தொடர்பில் நாம் எவரும் அலட்டிக் கொள்ளக்கூடாது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment