(செ.தேன்மொழி)
மோட்டார் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போக்கு வரத்து விதிகளை மீறியமை தொடர்பில் 1845 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மோட்டார் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் போக்கு வரத்து பிரிவைச் சேர்ந்த 9000 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஐந்து மணி முதல் இன்று திங்கட்கிழமை காலை ஐந்து மணி வரை முன்னெடுக்கப்பட இந்த சுற்றிவளைப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 113 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 113 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்போது 73 மோட்டார் சைக்கிள்களும், 26 முச்சக்கர வண்டிகளும், 5 லொறிகளும் மற்றும் பஸ் உட்பட பல்வேறு வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பின் போது மோட்டார் வாகன போக்கு வரத்து விதிகளை மீறியமை தொடர்பில் 1845 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது நாடளாவிய ரீதியில் 60 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துகளின் போது 20 பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்களிடம் அபராதம் அறவிடும் நோக்கத்திலோ அல்லது அவர்களை கைது செய்யும் நோக்கத்திலோ இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.
வீதி விபத்துகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலேயே இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரையிலும் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
No comments:
Post a Comment