தனிமைப்படுத்தல்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 17, 2020

தனிமைப்படுத்தல்!

முஹம்மத் றிழா

தனிமைப்படுத்தல் என்ற சொல் 1920ம் ஆண்டின் பின்னர் எம்மை மீள ஆட்கொண்டுள்ளது. தனிமைப்படுத்தலை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாவிட்டாலும், எதிர்காலத்தில் நாம் ஆரோக்கியமாக வாழ தனிமைப்படுத்தலை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். 

உலகளாவிய ரீதியில் இரண்டாவது அலையாக பரவிவரும் கொரோனா வைரஸிற்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமையால் “வீட்டில் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்“ என்ற தொனிப்பொருள் உலகளவில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.

தொற்று நோய்களுக்கு எதிர்ப்பு மருந்துகள் இல்லாமல் போகும் போது நோயாளர்கள் தனிமைப்படுத்தப்படுவது வரலாற்று நெடுகிலும் இடம்பெற்றுவருகின்ற ஒன்றாகும். 1918 பெப்ரவரி முதல் 1920 ஏப்ரல் வரை உலகை ஆட்கொண்ட ஸ்பானிஸ் புழு அல்லது இன்புளுவன்ஸா பென்டமிக் முதலாவது, இரண்டாவது அலை ஏற்பட்டபோது மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இது நமக்குள்ள கிட்டிய வரலாறாகும். 

கடந்த வாரம், ஆபிரிக்க ஆதிக்குடிகளின் மானுடவியல் வரலாறு குறித்த கட்டுரை ஒன்றை வாசிக்கக்கிடைத்தது. ஜனீ பொடி எழுதிய இந்த கட்டுரையில் கட்டுமஸ்தான கறுப்பின இளைஞன் ஒருவன் பற்றியும் எழுதியிருந்தார். அக்குலப் பெண்களின் மனதை வென்றவன் அவன். ஆனால் ஒருபோதும் தந்தை சொல் கேட்காத பிடிவாதக்காரன். அந்த ஆதிகுடிகள் வாழ்ந்த பகுதியில் மந்தைகளுக்கு நீர் அற்றுப்போகும் நிலை ஏற்பட, தந்தை அவ் இளைஞனை அழைத்து நீர் இருக்கும் பகுதியை கண்டுவருமாறு பணிக்கிறார். அப்போது அந்த இளைஞனிடம் இரண்டு விடங்களை பின்பற்றுமாறு தந்தை கேட்டுக் கொள்கிறார். முதலாவது, இறந்துகிடக்கும் மிருகங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடவேண்டாம். இரண்டாவது, கொண்டு செல்லும் நீரினை சாப்பிட்ட பின்னர் குறைந்தளவு பருகவும் என்று தந்தை அந்த இளைஞனிடம் அறிவுரை சொல்கிறார்.

ஆனால் அந்த இளைஞனோ தனது தந்தையின் அறிவுரையைக் கேளாது இறந்து கிடந்த மான் ஒன்றின் இறைச்சியை வயிறு புடைக்க சாப்பிட்டதுடன் கொண்டுசென்ற நீரினை தீருமளவு பருகியும் விடுகிறார். இவ்வாறு சாப்பிட்டு, நீர் அருந்தியதால் ஏற்பட்ட உண்ட களைப்பில் அவ் இளைஞன் அவ்விடத்திலே உறங்கவும் செய்கிறான். பின்னர் கண்விழித்துப் பார்க்கிற அவன், சூரியன் மறைவதை உணர்ந்து வீடு திரும்புகிறான். வீடு வந்ததும், தந்தையிடம் தான் நீரிருக்கும் பகுதி எதையும் காணவில்லை என்று சொல்லிவிட்டு வீட்டினுள் இருக்கலானான். 

இரவு பொழுதுதை அவனால் கடக்கமுடியவில்லை. அவன் வயிற்று வலியால் பீடிக்கப்பட்டான். பின்னிரவு தொடங்க அவனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. வயிறு வலித்துக் கொண்டே வயிற்றுப் போக்கும் ஏற்படுகிறது. தந்தையை சத்தமிட்டு அழைக்கிறான். தந்தை அவன் படும் வதையைக் கண்டு கண்கலங்குகிறார். அதிகாலை வரை இவ்வாறு அவதியுறும் அவனுக்கு தன்னால் முடியுமான கைமருந்தினை தந்தை செய்தும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. 

அதிகாலை தந்தை தனது குலத்தலைவனை காண ஓடிச் சென்று மகன் அவதியுறுவதைச் சொல்கிறார். குலத்தலைவன் கைமருத்துவர் ஒருவரை அழைத்துக் கொண்டு அவ் இளைஞனைக் காண விழைகிறார். கைமருத்துவரோ அவ் இளைஞனைப் பார்த்துவிட்டு வந்து குலத்தலைவனிடம் இவ்வாறு சொல்கிறார். “ இது ஒரு புதுவகை வியாதி. இது மற்றவர்களுக்கும் பரவக்கூடும் என்ற சந்தேகம் எனக்குள்ளது. இவரை சற்று தொலைவில் தனியாக இருக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் மருந்துகளை செய்துகொண்டுவருகிறேன்.“ என்றார்.

இதனைக் கேட்ட குலத்தலைவன், அக்கட்டுமஸ்தான கறுப்பின இளைஞனை தனிமைப்படுத்துகிறார். அவனுக்கென பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட அறையுள் அவனை அழைத்துச் செல்லும் போது அங்கு வியப்பிலிருந்த மக்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்கிறார்கள். இளம் பெண்கள் அவனைக் கண்டதும் கொல்லென சிரிக்கும் சத்தங்களும் கேட்கிறது.. என்று அக்கட்டுரையாளர் வரலாற்றைப் பதிகிறார். ஆக பொது மக்களுக்குள் புதிய வகை நோய் அறிமுகமாகும் போதும் ஆதி குடிகளும் இவ்வாறு தனிமைப்படுத்தும் முறையையே கையாண்டுள்ளார்கள் என்பதை இதை வாசிக்கும் போது எம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது. 

எனவே கொரோனா தொற்றின் மூலம் தனிமைப்படுத்தப்படும் மக்கள் பற்றியும், அவர் சார்ந்தவர்கள் பற்றியும் அல்லது ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்படும் போதும் சரி அதைச் சார்ந்து எழும் கதைகளும், ஏனையவர்களின் புரிதல்களும் நேர்மறையானதாக அமையவேண்டுமே தவிர அவர் பற்றியோ அல்லது அப்பிரதேசம் பற்றியோ தவறான மனப்பதிவு எம்மிடம் உருவாகிவிடக்கூடாது. மருத்துவத்துறை உரிய மருந்தினைக் கண்டுபிடிக்க எடுக்கும் காலத்திற்குள் ஏற்படும் இழுபறியால் மக்களை தண்டிக்கும் அளவிற்கு கதையாடல்களை பரப்புவது அவ்வளவு பொருத்தமற்றது. மருந்து கண்டுபிடிப்பாளர்களின் தவறு, மக்களின் தவறல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்றது போல உடலாரோக்கியம் இருந்தால்தான் எதையும் செய்யமுடியும் என்பதே வெளிப்படையான உண்மையாகும். ஆக தனிமைப்படுத்தும் நடைமுறையை மதித்து நடப்பதன் மூலம் தங்களையும், தங்களை அண்டிவாழும் மக்களையும், நாளைய சமூகத்தினையும் ஆரோக்கியமாக வாழ உதவுவோமாக!

No comments:

Post a Comment