ஒரு பெளத்தனாக முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்தை கேட்கின்றேன் : ஹர்ஷண ராஜ கருணா - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

ஒரு பெளத்தனாக முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்தை கேட்கின்றேன் : ஹர்ஷண ராஜ கருணா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

உலக சுகாதார அமைப்பின் அனுமதிக்கமைய முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இது அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக் கொள்வதல்ல என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜ கருணா தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம் சகோதரர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஒரு பெளத்தனாக இருந்து அரசாங்கத்தை கேட்கின்றேன். அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக் கொள்வதல்ல. உலக சுகாதார அமைப்பு அந்த விடயத்தை அனுமதித்துள்ளதுடன், 200 நாடுகளில் கொவிட்டில் மரணித்தவர்களை அடக்கம் செய்கின்றன. அதனடிப்படையிலே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

அத்துடன் உலக சுகாதார அமைப்பின் கோரிக்கைகளை பின்பற்றுவதில் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகின்றது. கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை ஏன் இதுவரை கொண்டுவராமல் இருக்கின்றது என நான் அரசாங்கத்திடம் கேட்டபோது, உலக சுகாதார அமைப்பு கொவிட்டுக்காக இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தும் அதனை பின்பற்றுவதில்லை. அதேநேரம் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கு அனுமதிக்கவில்லை என்பதற்காக தடுப்பூசி கொண்டுவருவதில்லை. ஏன் இவ்வாறு இரட்டை வேடம் போடவேண்டும் என கேட்கின்றேன்.

அதனால் அரசாங்கம் உலக சுகாதார அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் அடக்கம் செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும். மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் எந்த கட்சியும் எதிர்ப்பு இல்லை. அனைவரும் ஆதரவாகவே இருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்தில் இருப்பவர்களே அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஜனாதிபதி ஒரு நாடு, ஒரு சட்டம் என்று தெரிவித்தே ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதனை தற்போது காண முடியாது. அரச தரப்புக்கு ஒரு சட்டம் எதிர்க்கட்சிகளுக்கு வேறு சட்டமாகவே காண்கின்றோம். நீதிமன்ற உத்தரவில் சிறையில் இருக்கும் பிள்ளையான் மட்டக்களப்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றார். எந்த சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு செயற்படுவதற்கு அனுமதிப்பது.

அதேபோன்று குருணாகல் மேயரின் நடவடிக்கையில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட முடிந்ததா என்ற கேள்வி எமக்கு இருக்கின்றது. கடந்த அரசாங்க காலத்தில் வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் தற்போது முழுமையாக தங்களின் குற்றங்களில் இருந்து விடுதலையாவதை காணும்போது நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பில் சந்தேகம் எழுகின்றது.

விசேடமாக ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதியின் உருவத்தை பொறித்த சில் ஆடைகளை விநியோகித்த வழக்கில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் முற்றாக விடுக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை சரியா பிழையா என கேட்கின்றேன்.

அதனால் நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாப்பதாக தெரிவித்தாலும், தற்போது இடம்பெற்று வரும் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அது சந்தேகமாகவே இருக்கின்றது. அத்துடன் 20ஆம் திருத்தம் மூலம் அது மேலும் உறுதியாகின்றது என்றார்.

No comments:

Post a Comment