கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியில் அனைத்து இன பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டும் - உதவிகள் வழங்குவதில் கொழும்பு, வாழைச்சேனை உட்பட பல பகுதிகளில் குறைபாடு காணப்படுகிறது : ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியில் அனைத்து இன பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டும் - உதவிகள் வழங்குவதில் கொழும்பு, வாழைச்சேனை உட்பட பல பகுதிகளில் குறைபாடு காணப்படுகிறது : ரவூப் ஹக்கீம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கிழக்கில் தொல்பொருள் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள செயலணியில் அனைத்து இனங்களின் பிரதிநிதித்துவமும் உள்வாங்கப்பட வேண்டும். ஒரு இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்பட்டுள்ள குழுவினூடாக நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் பதவிக் காலம் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. அவரின் இந்த பதவிக் காலம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவருக்கு இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கருதுகிறேன். 20 ஆவது திருத்தத்தினூடாக அவரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தனக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பில் நிபுணர்குழுக்கள் ஆலோசனை வழங்குவதாக அவர் கூறியிருந்தார். மனித உரிமை ஆணைக்குழு காத்திரமாக செயற்பட போதுமான நிதி மற்றும் உதவிகள் வழங்கப்பட வேண்டும். பாடசாலைக்கு மாணவர்கள் சேர்ப்பது தொடர்பில் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை.

கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பில் கொழும்பு, வாழைச்சேனை உட்பட பல பகுதிகளில் குறைபாடு காணப்படுகிறது. தேவையான பகுதிகளில் கூடுதலான ஆளணியை ஈடுபடுத்த வேண்டும். சில கிராம சேவகர்கள் தமது பணியை சரிவர செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது.

மேலும் ஜனாதிபதி பல்வேறு ஜனாதிபதி செயலணிகளை நியமித்துள்ளார். கிழக்கில் தொல்பொருள் பாதுகாப்பிற்கும் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொல்பொருள் முக்கியமான இடங்கள் இருந்தாலும் கிழக்கு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனை கவனமாகவே கையாள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளனர். இந்த தொல்பொருள் விடயத்தில் உரிய பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கும் பெண் ஒருவரை நியமிக்க வேண்டும். அதேபோன்று குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும். நிதி அமைச்சின் செயலாளர் உட்பட பல பதவிகளை வகித்த தற்போதைய ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜெயசுந்தரவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment