சர்வதேசத்தை பகைத்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது, நவீன உலகில் தனிமையாக வாழ முடியாது : லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

சர்வதேசத்தை பகைத்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது, நவீன உலகில் தனிமையாக வாழ முடியாது : லக்ஷ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

இறக்குமதிகளை தடை செய்து அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு செல்லவே முயற்சிக்கின்றது. நவீன உலகில் தனிமையாக வாழ முடியாது. நாடுகளுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இனக்கப்பாட்டுடன் செல்வதன் மூலமே நாட்டை முன்கொண்டு செல்லலாம் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு செயற்படவே முயற்சிக்கின்றது. இறக்குமதி தடை செய்யும் போது எமது ஏற்றுமதிகளும் தடை செய்யப்படுகின்றது. அரசாங்கத்தின் இறக்குமதி தடைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எச்சிரிக்கை விடுத்திருக்கின்றது.

ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 25 வீதம் எமது பொருட்களை கொள்வனவு செய்கின்றது. அதேபோன்று அமெரிக்காவும் கொள்வனவு செய்கின்றது. ஆனால் சீனா ஒரு வீதமே எமது பொருட்களை கொள்வனவு செய்கின்றதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் நாங்கள் ஐக்கிய நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை செய்திருந்தோம்.

மேலும் ஏகாதிபத்திய ஆட்சி இருக்கும் நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் வருவதில்லை. சீனாவில் சுயாதீன நீதிமன்றம் அமைக்கப்படும் வரை 3 வருடங்கள் அங்கு முதலீட்டாளர்கள் செல்லவில்லை. எமது நாட்டிலும் 20ஆவது திருத்தம் மூலம் நீதிமன்ற சுயாதீனத்தன்மை இல்லாமல் போயுள்ளது.

19ஆம் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீன செயற்பாடுகள் 20ஆம் திருத்தம் மூலம் இல்லாமல் போயுள்ளது. அதனால் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை ஜனாதிபதி பெயரிடுபவர்களை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் 75 நியமனங்கள் இருக்கின்றன. அவை அனைத்துக்குமான நியமனங்களை ஜனாதிபதியே மேற்கொள்வார். அது தொடர்பில் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை. இன்று நாட்டில் எந்த ஆலோசனையும் யாரிடமும் கேட்பதில்லை. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் கேட்பதில்லை.

கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதுடன் விமான நிலையத்தை மூடுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசதான் ஆரம்பமாக தெரிவித்தார். ஆனால் அரசாங்கம் அதனை கண்டு கொள்ளவில்லை. இன்று தாய்வான் கொரோனாவை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு சென்றிருக்கின்றது. அதற்கு காரணம், அந்த நாடு ஆரம்பமாக விமான நிலையத்தை மூடியதாகும் என்றார்.

No comments:

Post a Comment