சிறைச்சாலைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

சிறைச்சாலைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது தற்போது 400 ஐயும் கடந்துள்ளது.

வெலிகட, போகம்பர, பூசா, மஹர மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளும், அதிகாரிகளுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது போகம்பர சிறைச்சாலையில் மொத்தம் 508 கைதிகள் உள்ளனர். அவர்களில் மொத்தம் 204 கைதிகள் பி.சி.ஆர். சோதனைககு உட்படத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 3,200 சிறைக் கைதிகள் தங்கியுள்ள பல்லேகலவில் அமைந்துள்ள புதிய சிறைச்சாலை வளாகத்திற்குள் வைரஸ் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தற்போது நாங்கள் எடுத்து வருகின்றோம் என போகம்பர சிறைச்சாலை கண்காணிப்பாளர் எஸ்.பிரபஹார தெரிவித்தார்.

இந்நிலையில் நாட்டில் நேற்றையதினம் சிறைச்சாலைகளில் 108 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 437 ஆக உயர்வடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய நேற்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட 108 புதிய கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் அதிகாரிகள் ஆவர். ஏனையவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐந்து சிறைச்சாலைகளிலிருந்து கண்டறியப்பட்டவர்கள் ஆவர்.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் தினசரி பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே நோயாளிகள் பதிவாகியுள்ள சிறை வளாகத்திலும், சிறைச்சாலைகளிலும் வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளுக்காக இதுவரை இரண்டு வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண் கைதிகள் வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையிலும், பெண் கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் அனைத்து சிறை ஊழியர்களுக்கும் விடுப்பு உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஊழியர்களும் இன்று (16) காலை 8 மணிக்குள் தங்கள் நிறுவனங்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad