கொழும்பில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகள் அபாயமுடையவையாகும் - வைத்தியர் சுதத் சமரவீர - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

கொழும்பில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகள் அபாயமுடையவையாகும் - வைத்தியர் சுதத் சமரவீர

(எம்.மனோசித்ரா) 

கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகள் அபாயமுடையவையாகும். இனங்காணப்படாத தொற்றாளர்கள் இருக்கக் கூடும் என்பதன் காரணமாகவே குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனி வீதி மற்றும் டாம் வீதி ஆகிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த பகுதிகள் அபாயமுடையவையாகும். இங்கு இனங்காணப்படாத தொற்றாளர்கள் இருக்கக் கூடும். எனினும் தொற்று வெளிப்படுவதற்கு சிறிது காலம் எடுக்கும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடும்.

எனவே குறித்த பிரதேசங்களிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு தொற்று பரவக் கூடாது என்பதற்காகவே அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கான சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும். இவ்வாறான சேவைகளில் ஈடுபடுபவர்கள் அடிப்படை சுகாதார வசதிகளை பின்பற்ற வேண்டும்.

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் உருவாகிய கொத்தணி தற்போது கட்டம் கட்டமாக குறைவடைந்து வருகிறது. பேலியகொடை கொத்தணி பாரிய கொத்தணியாக உருவாகியது. இதனுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் நாடளாவிய ரீதியிலும் இனங்காணப்பட்டனர்.

கொழும்பு மாநகர சபை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் மிக விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.

உலகலாவிய ரீதியில் 1.2 மில்லியனுக்கும் அதிக தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். உலக சனத் தொகையில் ஒரு மில்லியனுக்கு 160 பேர் உயிரிழக்கின்றனர். அமெரிக்காவில் 1 மில்லியன் சனத் தொகைக்கு 708 பேரும், பிரித்தானியாவில் 720 பேரும் உயிரிழக்கின்றனர். எனினும் இலங்கையில் ஒரு மில்லியன் சனத்தொகைக்கு இருவர் மாத்திரமே உயிரிழிக்கின்றனர்.

ஏனைய நாடுகளில் சமூகப் பரவல் ஏற்பட்டமையும் , இலங்கை இன்னும் சமூகப்பரவல் நிலைமையை அடையாமையும் இங்கு முக்கியத்துவமுடையவையாகும். இலங்கையில் வைரஸ் பரவலானது கட்டுப்படுப்பாட்டிலேயே உள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad