கொரோனா தொற்றுள்ள நபருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக இருப்பவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ். (Tedros Adhanom Ghebreyesus) இவருடன் கொரோனா பாதித்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். இதுபற்றி அறிந்த கெப்ரியேசஸ் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட நபர் என்னை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. நான் நலமுடனேயே உள்ளேன். அறிகுறிகள் எதுவும் இல்லை.
எனினும், வருகின்ற நாட்களில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வரைமுறைகளின்படி, என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். வீட்டில் இருந்தபடியே பணி செய்வேன். நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம்.
இதன் வழியே கொரோனா பரவலின் சங்கிலியை நாம் உடைக்க முடியும். வைரசை ஒழிக்க முடியும். சுகாதார விசயங்களை பாதுகாக்க முடியும். கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் மற்றும் கடுமையான பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் வேண்டிய பணிகளை நானும் என்னுடன் பணிபுரிபவர்களும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment