(இராஜதுரை ஹஷான்)
விடுதலைப் புலிகள் அமைப்பு யுத்தத்தால் மாத்திரமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. புலிகளது கொள்கை சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றம் தடை விதித்தும் நீதிமன்ற தீர்ப்புக்கு புறம்பாக செயற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன், வடக்குக்கு ஒரு நீதி, தெற்கிற்கு ஒரு நீதி என்பது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பு வலுப்பெற்றிருந்த நிலையில் மாவீரர் தினம் வடக்கில் அனுஷ்டிக்கப்பட்டது. 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பு யுத்தத்தின் ஊடாக மாத்திரமே தோற்கடிக்கப்பட்டது. எமது நாட்டு அரசியலும், சர்வதேச மட்டத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கை வியாபித்துள்ளது. வடக்கு அரசியல்வாதிகள் பிரிவினைவாத கொள்கையுடன் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இவ்விடயம் பெரும் போராட்டமாகவே உள்ளது.
இம்முறை மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு யாழ் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஷ்டித்து அதனை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இச்செயற்பாடு நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக அமையாதா?
இவர் ஏன் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. வடக்குக்கு ஒரு நீதி, தெற்குக்கு ஒரு நீதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு நாட்டில் ஒரு சட்டம் செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மாகாண அடிப்படையில் சட்ட நிர்வாகத்தை பிரித்து நிர்வாகம் செய்கிறது. இது மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆதரவுக்கு முரணானது.
மாவீரர் தின அனுஷ்டிப்புக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை வடக்கு அரசியல்வாதிகளே மீண்டும் தோற்றுவிப்பார்ரகள். ஆகவே அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார் .
No comments:
Post a Comment