எண்ணெய்க் குதங்களை இந்தியா பயன்படுத்துவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இப்போது இல்லை - பேருக்கு தேசிய வாதிகள் என கூறிக்கொண்டு நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதா தேசப் பற்று? : அனுரகுமார திசாநாயக - News View

Breaking

Post Top Ad

Sunday, November 29, 2020

எண்ணெய்க் குதங்களை இந்தியா பயன்படுத்துவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இப்போது இல்லை - பேருக்கு தேசிய வாதிகள் என கூறிக்கொண்டு நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதா தேசப் பற்று? : அனுரகுமார திசாநாயக

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ரணில் அரசாங்கம் 2003 ஆம் ஆண்டு திருகோணமலை எண்ணெய் குதங்களை ஆறுமாத கால தற்காலிக குத்தகைக்கு இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்ததே தவிர ஆறு மாதங்களின் பின்னர் புதிய உடன்படிக்கை புதுப்பிக்கப்படவில்லை. எனவே திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியா பயன்படுத்துவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இப்போது இல்லாத நிலையில் உடனடியாக எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜே.வி.பியியன் தலைவர் அனுரகுமார திசாநாயக வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர் வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், திருகோணமலையில் எமக்கென்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இருந்தது, 1930 ஆம் ஆண்டு பிரித்தானியாவினால் திருகோணமலை சீனக்குடாவில் இந்த எண்ணெய் களஞ்சிய நிலையம் உருவாக்கப்பட்டது. அப்போது 102 எண்ணெய் குதங்கள் இருந்தது, எனினும் பிற்காலத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இவற்றை விலை கொடுத்து வாங்கியது.

1970 ஆம் ஆண்டுகள் வரையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சரியாக இதனை பயன்படுத்தியது. யுத்தத்தின் பின்னர் இது கைமாற ஆரம்பித்தது. எமது நாட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான எண்ணெய் குதங்களே இப்போது எம்மிடம் உள்ளது, ஆனால் திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தை பயன்படுத்தினால் ஒன்றரை மாதங்களுக்கு தேவையான எண்ணெய்யை களஞ்சியப்படுத்த முடியும்.

அவ்வாறான நிலையிலேயே 2003 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இந்த எண்ணெய் குதங்களை தற்காலிகமாக இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தது. அதுவும் ஆறு மாத கால குத்தகைக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆறு மாதங்களின் பின்னர் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என கூறப்பட்டது, ஆனால் புதிய உடன்படிக்கை செய்துகொள்ளப்படவில்லை.

இந்தியாவுடன் செய்துகொண்ட தற்காலிக உடன்படிக்கை முடிந்துவிட்டது, இது தொடர்பில் இந்தியாவுடன் எந்தவொரு உடன்படிக்கையும் இப்போது இல்லை. ஜே.ஆர் அப்போதே இந்த குதங்களை அமெரிக்காவிற்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார். அதுதான் இலங்கையில் பிரிவினைவாதத்தை உருவாக்க இந்தியா தலையிட காரணியாகவும் அமைந்தது. அதன் பின்னரே இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தத்தை செய்துகொண்டது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் முன்றாவது தொகுதியாக இந்த எண்ணெய் குதங்கள் குறித்த சரத்தொன்ரை இணைத்துக் கொண்டனர். எப்படியேனும் இதனை அபகரிக்க வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருந்தது. அதற்கமைய 2003 ஆம் ஆண்டு இலங்கையுடன் ஒப்பந்தம் ஒன்றினை செய்துகொண்டது. இந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானது, எண்ணெய் குதங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானது.

அவ்வாறானதொரு நிலையில் இந்தியாவிற்கு பெற்றுக் கொடுக்க எந்த உரிமையும் இல்லை. அவ்வாறு இருந்தும் ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் டொலர்கள் என்ற ரீதியில் ஆறு மாத குத்தகைக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான குத்தகை தொகையை கூட இந்தியா வழங்கவில்லை என்றே கூறப்படுகின்றது.

இந்த கைமாற்றல் குறித்து இன்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்த எண்ணெய் குதங்களை அரசாங்கம் மீண்டும் எமக்கே பெற்றுக் கொள்ளுமா என அறிவிக்க வேண்டும்.

இந்த எண்ணெய் களஞ்சியசாலையை நாம் பயன்படுத்தினால் ஆண்டுக்கு போக்கு வரத்து செலவுகளுக்காக செலவழிக்கும் 700 மில்லியன் சேமிக்க முடியும். எனவே அரசாங்கம் இது குறித்து வெளிப்படையாக உண்மைகளை தெரிவிக்க வேண்டும். எமது வளங்களை எமக்கு பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எடுக்க முடியுமா.

பேருக்கு தேசிய வாதிகள் என கூறிக்கொண்டு நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதா தேசப் பற்று? நடிப்பிற்காக மாரிலும் நிலத்திலும் அடித்துக் கொண்டு தேச பற்றாளர்கள் என கூறிக்கொண்டு இல்லாது அதனை செயலில் காட்ட வேண்டும். 

இந்தியாவுடன் ஒப்பந்தம் இல்லாது, அவர்கள் வரி செலுத்தாத ஒரு வளத்தை ஏன் இந்தியாவிற்கு நாம் கொடுக்க வேண்டும். உடனடியாக இதனை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad