அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முதற் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (zoom) மூன்று அமைச்சின் செயலாளர்களை நேற்றைய (26) கூட்டத்தில் இணைத்துக் கொண்டிருந்தது.
கோப் குழு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நேற்று பிற்பகல் ஆரம்பமான பின்னர், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி சஞ்சீவ முணசிங்க, கைத்தொழில் அமைச்சின் செயாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா மற்றும் பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ஆகியோர் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைத்து கொண்டனர்.
களனி கங்கையின் நீர் மாசுபடுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோப் குழுவினால் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், இதன்போது எவ்வித தொழில்நுட்ப தடங்கல்களும் இன்றி கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்களுடன் ஒன்லைன் முறையில் கலந்துரையாடினர்.
பாராளுமன்றத்திலுள்ள குழு அறைகளில் இரண்டு அறைகள் ஒன்லைன் தொழில்நுட்பத்தில் கூட்டங்களை நடத்தக்கூடிய வசதிகளைக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற அதிகாரிகள் பல மாதங்களுக்கு முன்னர் இந்தத் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்ததுடன், இந்த முயற்சிகள் தற்பொழுது வெற்றியளித்திருப்பதால் எதிர்காலத்தில் பாராளுமன்ற கூட்டங்களை ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க முடியும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழு, ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உகண்டாவில் தங்கியுள்ள கென்யாவுக்கான இலங்கையின் புதிய தூதுவருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.
No comments:
Post a Comment