சரணடைய வழங்கப்பட்ட 72 மணி நேர காலக்கெடு முடிவு : கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் எத்தியோப்பிய ராணுவம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 26, 2020

சரணடைய வழங்கப்பட்ட 72 மணி நேர காலக்கெடு முடிவு : கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் எத்தியோப்பிய ராணுவம்

எத்தியோப்பியாவில் மத்திய ராணுவத்திற்கும் டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக சண்டை நடைபெற்று வருகிறது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகிறார். இவர் 2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

எத்தியோப்பியாவில் டைக்ரே என்ற மாகாணம் அமைந்துள்ளது. தன்னாட்சி பெற்ற இந்த மாகாணத்தில் டைக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். 

மேலும், டைக்ரே மாகாணத்தை டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018 ஆம் ஆண்டு வரை எத்தியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும், அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் எத்தியோப்பிய ராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்தனர். 

டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், 2018 ஆம் ஆண்டு முதல் அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் மத்திய அரசுக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.

இந்த மோதலின் உச்சமாக நவம்பரில் டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் ராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். டைக்ரே மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளையும், ஆயுதக்கிடங்குகளையும் டைக்ரேயன்ஸ் கைப்பற்றினர்.

இதன் பயனாக டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. மேலும், டைக்ரேயன்ஸ் எத்தியோப்பிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தை பிரதமர் அபே அகமது டைக்ரே மாகாணத்திற்க்கு அனுப்பி வைத்தார். 

அங்கு டைக்ரேயன்ஸ் சமூகத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும், அவர்களை சார்ந்த ராணுவ பிரிவினரும் இணைந்து மத்திய படையினருக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

உள்நாட்டு சண்டை காரணமாக டைக்ரே மாகாணம் முழுவதும் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. 

ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு சண்டையால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான சூடானுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், டைக்ரே மாகாணத்தின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி வரும் எத்தியோப்பிய அரசு கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72 மணி நேர காலக்கெடு விதித்தது. அந்த காலக்கெடு இன்றுடன் (26) முடிவடைந்தது. 

இந்நிலையில், சரணடைவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளதால் மத்திய ராணுவம் தங்கள் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எத்தியோப்பிய பிரதமர் அபே அகமது தெரிவித்துள்ளார்.

டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையில் எத்தியோப்பிய அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது. 

மேலும், இந்த உள்நாட்டு சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment