கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை எரிப்பதற்கான தடை - உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை 30 ஆம் திகதி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 26, 2020

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை எரிப்பதற்கான தடை - உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை 30 ஆம் திகதி

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

எஸ்.சி.எப்.ஆர். 109 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளை அவசர தேவையாக கருதி உடன் விசாரணைக்கு எடுக்குமாறு, சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை அடுத்து அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், புதன்கிழமையன்று (25) மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்பட விசேட நகர்த்தல் பத்திரங்களை ஏற்றுக் கொண்டு, மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளை விசேடமாக முன்னெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானத்தது. இதற்கமைவாக நேற்று இம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 

இதன்போது அம்மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப் மற்றும் ஏர்மிசா ரீகல் ஆகியோருடன் ஆஜரானார்.

இந்நிலையிலேயே இம்மனு தொடர்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள வைத்தியர் சன்ன பெரேரா சார்பில் மன்றில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக, அவரது கனிஷ்ட சட்டத்தரணி மன்றில் விடயங்களை தெளிவுபடுத்தினார்.

அதன் பிரகாரமே குறித்த மனு உள்ளிட்ட, கொவிட் மரணங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரும் 11 மனுக்களையும் எதிர்வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் காமினி அமரசேகர ஆகியோரே இதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.

இதன்போது இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர் ஆகியோரும் சிரேஷ்ட சட்டத்தரனிகளான விரான் கொரயா, என்.எம்.சஹீத், பாயிஸ் உள்ளிட்ட சட்டத்தரனிகளும் உயர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் உடல்கள் எரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டு, எரிப்பு நடவடிக்கைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பல தரப்பினராலும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பல மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

கடந்த ஜூன் மாதம் 08ஆம் திகதியும் ஜூலை மாதம் 13ஆம் திகதியும் இம்மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருந்தன. எனினும் இதுவரை தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை.

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்ற விவகாரத்தினால் முஸ்லிம்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள சூழ்நிலையில், உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சியினால் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2170/8 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்ய கோரியே இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் சார்பில் இம்மனுக்கள் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே ஆஜராகின்றார்.

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக காலத்துக்கு காலம் திருத்தப்பட்டமைக்கு அமைவாக 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 7481 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தானியங்களை களஞ்சியம் செய்தல் மற்றும் அங்கிலொஸ்டோமியாசிஸ் ஒழுங்கு விதிகளை மேலும் திருத்துவதாக சுட்டிக்காட்டி 2170/8 எண்ம வர்த்தமானி கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டம் எனும் தலைப்பின் கீழ் இந்த திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதில் முதல் மூன்று திருத்தங்களாக 46,47 மற்றும் 48 ஆம் ஒழுங்கு விதிகளில் உள்ள சில சொற்பதங்கள் திருத்தப்பட்டிந்த நிலையில், பிரதானமாக நான்காவது அம்சமாக 61 ஆவது ஒழுங்கு விதியுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டிருந்தன. 

61. அ எனும் புதிய பிரிவினூடாக கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் இறக்கும் ஒருவரின் பிரேதத்தை தகனம் செய்தல் எனும் விடயம் பேசப்பட்டுள்ளது.

அதன்படி 61,62 ஆம் ஒழுங்கு விதிகளில் எது எவ்வாறு கூறப்பட்டிருப்பினும், கொரோன வைரஸ் எனும் கொவிட் 19 தொற்றினால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாக சந்தேகிக்கபப்டும் ஒருவரின் பிரேதம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் உத்தரவுகளுக்கு அமைய, உயிரியல் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் நோக்கில் 800 முதல் 1200 பாகை செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் எரித்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறு எரித்தல் அல்லது தகனம் செய்யும் செயற்பாடானது உரிய அதிகாரியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுடலை அல்லது இடத்திலேயே இடம்பெற வேண்டும் என அந்த வர்த்தமானியின் 4 ஆவது பிரிவின் 1. அ, ஆ பகுதிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2170/8 ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (2) ஆம் பிரிவின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த அல்லது அந்த தொற்று காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் பிரேதத்தை, தகனம் செய்தல் தொடர்பில் உரிய அதிகாரியினால் நியமிக்கப்படும் அதிகாரி தவிர்ந்த வேறு எவரிடமும் கையளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 (3) ஆம் பிரிவின் பிரகாரம், பிரேதத்தை தகனம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் உடை, மீள பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சவப் பெட்டியுடன் சேர்த்து எரித்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

2170/8 ஆம் இலக்க வர்த்தமானியின் 4 (4) ஆம் பிரிவில், மீள பயன்படுத்த முடியுமான பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பின் அவற்றை சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள உரிய உத்தரவுகளுக்கு அமைய தொற்று நீக்கம் மற்றும் தூய்மையாக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் 4 (5) அம் பிரிவில் பிரேதத்தின் சாம்பலை, உறவினர்கள் கோருவார்களாயின், அவர்களுக்கு கையளிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இறப்போரின் சடலங்களை தகனம் செய்யவும், புதைக்கவும் உலக அளவில் 182 நாடுகளில் அனுமதியுள்ளதாகவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலிலும் அதற்கான பரிந்துரைகள் உள்ள போதும் இலங்கையில் மட்டும் தகனம் செய்வதை ஏற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனூடாக சுதந்திரமாக தனது மத அனுஷ்டானங்களை செய்வதகான உரிமை உள்ளிட்டவை மீறப்படுவதாக சுட்டிக்காட்டி இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கள் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு மேலதிகமாக இரு கத்தோலிக்கர்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளமை விஷேட அம்சமாகும்.

இந் நிலையில், நேற்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற விசாரணைகளின்போது, சுகாதார அமைச்சின் இணக்கப்பாட்டுடன் சட்டமா அதிபர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காவிடின் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment