குற்றத்தை ஒப்புக் கொண்ட MT New Diamond மாலுமிக்கு 12 மில்லியன் ரூபா அபராதம் - சட்டமா அதிபரின் கோரிக்கை நிராகரிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

குற்றத்தை ஒப்புக் கொண்ட MT New Diamond மாலுமிக்கு 12 மில்லியன் ரூபா அபராதம் - சட்டமா அதிபரின் கோரிக்கை நிராகரிப்பு

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பிடித்த நிலையில் மீட்கப்பட்ட MT New Diamond கப்பலின் மாலுமி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

கிரேக்க மாலுமியான Stereo Sterio Ilias, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்றையதினம் (14) இவ்வாறு குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக் கொண்ட அவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் ரூபா. 12 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நீதிமன்றில், சட்டமா அதிபரினால் அவரிடமிருந்து ரூபா. 200 மில்லியன் இழப்பீடு கோரப்பட்டது.

ஆயினும், குறித்த அபராதத் தொகையான ரூபா. 12 மில்லியனை செலுத்தும் பட்சத்தில் குற்றவாளியை விடுதலை செய்ய முடியும் என நீதிமன்றம் இதன்போது அறிவித்தது.

இதன்போது குறித்த நஷ்டஈட்டுத் தொகையையும் வழங்க உத்தரவிடுமாறு, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்த போதிலும், இவ்வாறு உத்தரவிடுவது இரு தரப்பினருக்கும் பாரபட்சமாக அமையும் என்பதால் அவ்வாறு உத்தரவிட முடியாது என நீதவான் அறிவித்தார்.

கடந்த செப்டம்பர் 03ஆம் திகதி அம்பாறை, சங்கமன்கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் வைத்து MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீப்பிடிப்பு தொடர்பில் உரிய நிறுவனத்திற்கு முறையான தகவல் பரிமாற்ற நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனவும், தன்னியக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என, குறித்த மாலுமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டு, அன்றையதினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 08ஆம் திகதி, சட்டமா அதிபரினால், கடல் சுற்றாடல் மாசடைதல் அதிகார சபையின் 38ஆம் சட்டத்தின் 26ஆம் பிரிவின் கீழ் மாலுமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad