கொரோனா இனங்காணப்படும் அவசியமான பிரதேசங்களுக்கு மட்டுமே ஊரடங்குச் சட்டம் - அரசியல் தேவைக்காக எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை : எதிர்க்கட்சித் தலைவருக்கு சுகாதார அமைச்சர் பதில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 7, 2020

கொரோனா இனங்காணப்படும் அவசியமான பிரதேசங்களுக்கு மட்டுமே ஊரடங்குச் சட்டம் - அரசியல் தேவைக்காக எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை : எதிர்க்கட்சித் தலைவருக்கு சுகாதார அமைச்சர் பதில்

பா.கிருபாகரன்

கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படும் அவசியமான பிரதேசங்களுக்கு மட்டுமே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும். நாடு முழுவதற்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பித்து நாட்டை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் எந்த தகவல்களையும் மறைக்கவில்லை. சிலர் இதனை வைத்து அரசியல் இலாபம் தேட முனைகின்றனர். எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது போல் அரசாங்கம் அரசியல் தேவைக்காக எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர்மட்டத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

நேற்று காலையும் ஜனாதிபதியின் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்றியே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது எங்கிருந்து இந்த தொற்று முதல் நோயாளருக்கு வந்துள்ளது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.

4800 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மட்டுமன்றி அவர்களோடு தொடர்புபட்ட அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்கிணங்க 1816 பேருக்கு சமூகத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்துடன் எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதுபோல நோய் சந்தேகத்துக்குரியவர்களும் சாதாரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களும் ஒரே வாகனத்தில் கொண்டு சொல்லப்படுவதில்லை. தொற்று இனங்காணப்பட்ட நோயாளிகள் அம்புலன்ஸ் மூலமே ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் தங்குவதற்கு தனியான ஹோட்டல்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நோயாளிகளுடன் தங்கவைக்கப்படுவதில்லை.

பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 303160 பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடளாவிய அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஒரு நாளில் குறைந்தது பத்து பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு உரடங்குச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சில விடயங்களை கூறினர். நாடு முழுவதற்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பித்து நாட்டை முடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அவ்வாறு செய்வது அரசாங்கத்திற்கு சுலபம் என்றாலும் அவ்வாறு செயற்படப்போவதில்லை என தெரிவித்த அமைச்சர், கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்கானப்படும் அவசியமான பிரதேசங்களுக்கு மட்டுமே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment