முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பு விடயங்களில் அக்கறை கொண்டிருக்கவில்லை என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க துபாயிலிருந்து காணொளி ஊடாக சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஆர்வமற்றவர் போல காணப்பட்டார் தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டங்கள் முடிவடைவதற்கு முன்னரே அவர் அதிலிருந்து வெளியேறியமை இதனை புலப்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவை தொடர்பில் அதிக அக்கறை கொண்டிருக்கவில்லையென அவர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பேரவையின் சந்திப்புகள் ஆரம்பமாகி முதல் 5 அல்லது 10 நிமிடங்களில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டத்தில் இருந்து வெளியேறிவிடுவதாகவும் அவருடன் அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகக் கடமையாற்றிய சாகல ரத்நாயக்கவும் வௌியேறிவிடுவதாகவும் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவு 2018ம் ஆண்டு தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஹாசிம் குறித்து தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் ஆராய்ந்தது எனவும் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
2018 திகன கலவரத்தின் போது சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து இராணுவ புலனாய்வு பிரிவினர் தேசிய பாதுகாப்பு பேரவைக்கு விசேடமாக தெரிவித்திருந்தனர் எனவும் முன்னாள் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
2018 மார்ச் மாதம் சஹ்ரானை கைது செய்ய வேண்டிய தேவை குறித்த இராணுவ புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியிருந்தது என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவ தளபதி எனினும் எந்த அதிகாரியும் இது குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் ஐ.எஸ். அமைப்பின் கொள்கையை பின்பற்றுகின்றார் எனவும் எச்சரித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018 முதல் சஹ்ரான் ஐ.எஸ். அமைப்பின் கொள்கையால் வழிநடத்தப்படுவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரிந்திருந்தது எனவும் முன்னாள் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
தினக்குரல்
No comments:
Post a Comment