நாடு ஏகாதிபத்திய பாதையை நோக்கி செல்லுகிறது, ஒரே நாடு ஒரே சட்டத்தை ஆளும் தரப்பினர் கடைப்பிடிக்கின்றார்களா - ரோஹிணி கவிரத்ண - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

நாடு ஏகாதிபத்திய பாதையை நோக்கி செல்லுகிறது, ஒரே நாடு ஒரே சட்டத்தை ஆளும் தரப்பினர் கடைப்பிடிக்கின்றார்களா - ரோஹிணி கவிரத்ண

(செ.தேன்மொழி) 

நாடு ஏகாதிபத்திய பாதையை நோக்கி செல்வதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, இந்த பாதையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக அனைவரையும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விடுத்த அவர் மேலும் கூறிதயதாவது, அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தின் உதவியாளர்களாகவே செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும். நாடு தற்போது ஏகாதிபத்திய பாதையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. இந்த பாதையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கள் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் பரிசீலனைகளை செய்திருந்தது. இது தொடர்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் முதலில் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கே தெரிவிக்கும். பின்னர் அவர்கள் ஊடாகத்தான் தீர்ப்பு தொடர்பான தகவல்களை எமக்கு பெற்றுக் கொள்ள முடியும். 

ஆனால், இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு தற்போது சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருகின்றது. அது எவ்வாறு சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. யார் அந்த தகவல்களை வழங்கியது என்பது தொடர்பில் எந்தவித தகவலும் இல்லை. வெளிநாடொன்றில் இந்தகைய செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால் , சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்து சிறை வைத்திருப்பார்கள். ஆனால், இங்கு அத்தகைய எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவில்லை. 

இந்நிலையில் இதனை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்டார்களா ? இரட்டை பிரஜாவுரிமை வைத்துக் கொண்டிருப்பவர்கள் வெளியிட்டார்களா ? அல்லது மொட்டு அணியினர் வெளியிட்டார்களா ? என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. ஆயினும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும். 

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்று அரசாங்கம் கூறி வந்தாலும், அதனை ஆளும் தரப்பினரே கடைப்பிடிக்கின்றார்களா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. நாட்டு மக்கள் அனைவருமே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் சட்டவிதிகளை கடைப்பிடித்துவரும் நிலையில், ஆடை தொழிச்சாலைக்கு இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட ஊழியர்களுக்கு அந்த சட்டவிதிகள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதற்கு பிரதான காரணம் அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கத்தினுடனான உறவே முக்கியமாகியுள்ளமையே. 

இதேவேளை, சீனாவிலிருந்து வந்த உயர் அதிகாரிகள் தொற்று நீக்கல் சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. அது தொடர்பில் ஆளும் தரப்பினரிடம் கேள்வி எழுப்பினால் 'அத்தகைய உயர் அதிகாரிகளை எவ்வாறு, தொற்று நீக்கல் சட்டவிதிகளை கடைப்பிடிக்குமாறு கூற முடியும் என்று' சுகாதார அமைச்சர் கூறுகின்றார். இதுதான் நாட்டின் நிலைமை. 

இந்நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமும் நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது. அதனால் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணையுங்கள் என்றார்.

No comments:

Post a Comment