(நா.தனுஜா)
கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்கல் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக் கொள்வது பற்றிய இரு தரப்புக் கலந்துரையாடல்கள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினர் யெங் ஜியேச்சி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கின்றார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினர் யெங் ஜியேச்சி, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்கல் ஆகிய விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளல் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் மிகவும் கருத்தாழமிக்க கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
கொவிட்-19 வைரஸ் பரவலின் பின்னரான காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்திக் கொள்வதில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய துறைகளாக இவை காணப்படுகின்றன என்று இரு தரப்பும் ஏற்றுக் கொண்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் பிரசன்னமாகியிருந்தார்.
கல்வித்துறை சார்ந்த பரஸ்பர ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்திக் கொள்வதற்கான செயற்திட்ட உருவாக்கத்திற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு அரசாங்கங்களும் வெகுவிரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் என்று இதன்போது யெங் ஜியேச்சி முன்மொழிந்தார்.
அதுமாத்திரமன்றி சீனமொழியைக் கற்றுக் கொள்வதற்கான கேள்வி இலங்கையில் உயர்வாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஆர்வம் காணப்படுமாயின் சீன மொழிக் கற்பித்தலுக்கான சர்வதேச ஆசிரியர் கற்கை நெறியைப் போதிக்கக் கூடிய நிலையங்களை இலங்கையில் ஸ்தாபிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி தொழிற்பயிற்சி வழங்கலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கு சீனா பெரிதும் முக்கியத்துவம் வழங்குகின்றது என்றும் யெங் ஜியேச்சி குறிப்பிட்டார்.
சீனாவினால் கடந்த 5 வருட காலத்தில் சுமார் 7000 இலங்கையர்களுக்கு பொதுச் சேவை மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றில் பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் கூட சீனாவினால் இலங்கையர்களுக்கு இணையம் மூலமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கலந்துரையாடலின் போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சீன உயர்மட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்கலுக்கான கட்டமைப்புக்களை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்ள யெங் ஜியேச்சி, இந்த முன்மொழிவு தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவதாகவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment