ஆளுந்தரப்பிற்குள் சிலரால் வெளியிடப்படும் கருத்துக்கள் அவர்கள் அரசியல் ரீதியில் சந்தர்ப்பவாதிகளாக செயற்படுவதை வெளிப்படுத்துகின்றது : சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

ஆளுந்தரப்பிற்குள் சிலரால் வெளியிடப்படும் கருத்துக்கள் அவர்கள் அரசியல் ரீதியில் சந்தர்ப்பவாதிகளாக செயற்படுவதை வெளிப்படுத்துகின்றது : சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க

(நா.தனுஜா) 

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்ற உரிமை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இருக்கின்றது. எனினும் ஆளுந்தரப்பிற்குள் 20 வது திருத்தம் தொடர்பில் சிலரால் வெளியிடப்படும் கருத்துக்கள், அவர்கள் அரசியல் ரீதியில் சந்தர்ப்பவாதிகளாக செயற்படுவதையே வெளிப்படுத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அவிசாவளை ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க தெரிவித்தார். 

பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது விளையாட்டுக்களைப் பொறுத்த வரையில் குழுவாக விளையாடக் கூடிய மற்றும் தனியாக விளையாடக் கூடிய விளையாட்டுக்கள் இருக்கின்றன. அரசியல் குழுவாக விளையாடப்பட வேண்டிய விளையாட்டாகும். 

எந்தவொரு விடயம் தொடர்பிலும் கட்சியொன்றுக்குள் கலந்துரையாடித் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. எனினும் அந்த வாய்ப்பையும் கட்சியின் கொள்கைகளையும் புறந்தள்ளி, தமது தனிப்பட்ட நலன்களை மாத்திரம் மையப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பலரை கடந்த கால அரசியல் வரலாற்றில் கண்டிருக்கின்றோம். 

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தைப் பொறுத்த வரையிலும் கூட அவ்வாறான சிலரின் விமர்சனங்களையே காண்கின்றோம். எந்தவொரு விடயம் தொடர்பிலும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்ற உரிமை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது. 

எனினும் தமது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான அடித்தளத்தை வழங்கிய அரசியல் கட்சியொன்றை எவரேனும் அரசியல் ரீதியில் விமர்சிப்பார்களாயின், நாமும் அதற்குப் பதிலளிப்பதற்குத் தயாராகவே இருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment