சுய தனிமைப்படுத்தலில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று மொனராகலை மெதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொவிட்-19 தொற்றுக்குள்ளான குறித்த நபர் தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருந்தபோதே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் மொனராகலை, பொல்கொல்ல, வல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலிருந்து மொனராகலைக்கு தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து உயிரிழந்தவரின் மகளும் அதே பேருந்தில் பயணித்திருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து முழு குடும்பமும் சுகாதார அதிகாரிகளால் அவர்களது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த 70 வயதுடைய நபர் நேற்று இரவு திடீர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்தாரா? இல்லையா? என்பதை கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவரது உடலை காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment