வெண்ணப்புவ நபருக்கு மன்னாரில் கொரோனா - 35 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

வெண்ணப்புவ நபருக்கு மன்னாரில் கொரோனா - 35 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

வெண்ணப்புவ பகுதியில் இருந்து மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் கட்டிட பணிக்கு சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 35 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். 

மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (9) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் பட்டித்தோட்டம் என்ற பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக நேற்றுமுந்தினம் புதன்கிழமை (7-10-2020) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற போது குறித்த நபருக்கு பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதன் முடிவு நேற்று வியாழக்கிழமை இரவு கிடைக்கப் பெற்றது. அதற்கமைவாக குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் வெண்ணப்புவ பகுதியைச் சேர்ந்தவர். 

இவருடன் கட்டிட நிர்மான பணியில் ஈடுபட்டு தங்கி இருந்த 32 பேருடன் இவர் வேலை செய்ய சென்ற மேலும் 3 பேரும் உடனடியாக அந்த பகுதிகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் இவர்கள் மன்னார் மாவட்டத்தில் சென்ற இடங்கள் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பகுதியில் சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

மன்னார் மீன் விற்பனை நிலையமும் மூட வேண்டிய தேவை உள்ளது. இவர்களுடன் தொடர்புபட்டவர்கள் தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டுள்ள 35 பேருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் கம்பஹா, சிலாபம், மாரவில பகுதிகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வேலை நிமித்தமாக சென்று தங்கி இருக்கக் கூடிய அணைவரையும் அருகில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். 

பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. எனினும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பயண்படுத்தி சுகாதார அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment