சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தாய்வானுக்கு ஏவுகணை விற்கும் அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தாய்வானுக்கு ஏவுகணை விற்கும் அமெரிக்கா

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தாய்வானுக்கு 2.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள 100 ஹார்பூன் கடலோரத் தற்காப்பு ஏவுகணை அமைப்பை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த ஒப்பந்தம் சீனாவுக்கு மேலும் சினமூட்டக்கூடும். ஹார்பூன் ஏவுகணை அமைப்பு தாய்வானின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, அதன் அரசியல் நிலைத்தன்மை, இராணுவச் சமநிலை ஆகியவற்றை நிர்வகிக்க உதவும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள அறிக்கை குறிப்பிட்டது.

தீவு நாடான தாய்வானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இது தொடர்பாக தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தாய்வானின் பக்கம் நிற்கிறது. 

தாய்வான் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு ஏதுவாக அந்த நாட்டுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஏற்கனவே வர்த்தகம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான மோதல் நீடிக்கும் சூழலில் தற்போது தாய்வான் விவகாரம் மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக அமெரிக்காவின் 3 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தாய்வானுக்கு 100 ஹார்பூன் கடலோரத் தற்காப்பு ஏவுகணை அமைப்பை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.4 பில்லியன் டொலர் ஆகும்.

ஹார்பூன் ஏவுகணை கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை 500 பவுண்டு எடையுள்ள ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது. 

இது கடலோர பாதுகாப்பு தளங்கள், மேற்பரப்பில் வான் ஏவுகணை தளங்கள், விமானம், துறைமுகங்களில் உள்ள கப்பல்கள், துறைமுகங்கள் மற்றும் தொழில்துறை மையங்களை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டது.

125 கிலோ மீற்றர் தூரம் வரை பாய்ச்சக் கூடிய ஏவுகணைகளை அந்த அமைப்பு உள்ளடக்கியிருக்கும்.

போயிங் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் அந்த ஏவுகணைகளை கனரக வாகனங்களிலோ, நிலையான தளங்களிலோ பொருத்தலாம்.

No comments:

Post a Comment