மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புராதன இடங்கள் என தொல்பொருள் திணைக்களத்தினால் பட்டியலிடப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு அவற்றை அளவை மேற்கொண்டு எல்லைப்படுத்தவென விசேட குழுவொன்று தொல்பொருள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்விசேட குழு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க. கருணாகரணை இன்று (26) மாவட்ட செலயகத்தில் வைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டது.
இக்குழுவின் முதற்கட்ட செயற்பாடாக ஏறாவூர்ப் பற்று, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 102 இடங்களைப் பார்வையிட்டு அளவை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்கு முன்னர் குறித்த பிரதேச செயலாளரை அணுகி சம்மந்தப்பட்ட பிரிவு கிராம சேவகர், அதனோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள், மாவட்ட தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி எடுக்கப்படும் ஆலோசனை மற்றும் முடிவுகளுக்கமைவாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கினார்.
இச்சந்திப்பின்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப் பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரன்ஜினி முகுந்தன், விசேட குழுவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வு அதிகாரிகளான பிரியந்த கபுகொட, முது தென்னகோன், கள முகாமையார் எஸ். கதுருசிங்க, மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் உட்பட மாவட்ட தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
(காத்தான்குடி நிருபர் - எம்.எஸ்.எம். நூர்தீன்)
No comments:
Post a Comment