யாழ். பல்கலைக்கழகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு - மேலதிக தகவல்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 27, 2020

யாழ். பல்கலைக்கழகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு - மேலதிக தகவல்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்

கொரோனா பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) மூன்றாம் வருட, இரண்டாம் அரையாண்டுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான அனுமதி அட்டைகள் வழங்கும் பணியும் இடம்பெற்றது. 

இந்த நிலையில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் பலர், மாவட்டங்களை கடந்து வர முடியாத நிலை காணப்படுகின்றமை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனை கருத்திற்கொண்டு நிலைமைகள் சீராகும் வரை பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையப் பணிப்பாளருக்கு துணைவேந்தர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார். 

இதேநேரம், பரீட்சை ஒத்தி வைப்பு, மறு திகதியிடல் பற்றிய விபரங்கள் பகிரங்க அறிவித்தல் மூலமும், யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தின் இணைய வழித் தகவல்களுக்கூடாகவும் வெளியிடப்படும்.

இணையவழி வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறிக்குரிய புதிய மாணவர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரீட்சைகள் பற்றிய மேலதிக தகவல்களை 021 2223612 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

(நிதர்சன் விநோத், ஐங்கரன் சிவசாந்தன்)

No comments:

Post a Comment