பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், கொரோனா பரவல் விகிதம் ஒரு மாதத்துக்குள் 24 சதவீதம் குறையும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மாதிரி ஆய்வு ஒன்றை நடத்தினர்.
கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை 20ஆம் திகதி வரை 131 நாடுகளில் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும், அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் அடிப்படையாக வைத்து, இந்த மாதிரி ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வு முடிவுகளை ஒரு பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஷ் நாயர் கூறியதாவது கொரோனா பரவலை குறைக்க தனிப்பட்ட நடவடிக்கைகளாக பாடசாலைகள், பணியிடங்களை மூடுதல், பொது நிகழ்ச்சிகளை தடை செய்தல், 10 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளால், 28 நாட்களில் கொரோனா பரவல் விகிதம் 24 சதவீதம் குறையும்.
சில நாடுகளில் கொரோனா 2 ஆவது அலை பரவல் நடப்பதை பார்த்துள்ளோம். அதை தவிர்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்த வேண்டும். இதற்கு நல்ல பலன்கள் ஏற்படுவதை பார்த்துள்ளோம்.
பாடசாலைகளை திறந்ததால், சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்ததை கவனித்துள்ளோம். எனவே, பாடசாலைகளை திறக்கும்போது, கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
No comments:
Post a Comment